Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்போது தடதடக்கும் மதுரை - போடி ரயில் பாதை? மக்களின் நீண்ட காத்திருப்பு

புதிய ரயில்பாதை

மிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தற்போது தேனி இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் வியாபாரத் தேவைக்காகப் போடி முதல் மதுரை வரை ரயில்பாதை அமைத்தனர். 1928-ஆம் ஆண்டு மதுரையில் இருந்து போடி வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில்சேவை தொடங்கப்பட்டது. இது, தேனி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி வட்டார மக்களுக்கும் உதவியாக இருந்தது. குறைந்த கட்டணத்தில் பழங்கள், காய்கறிகள், மற்றும் இதர விவசாயப் பொருள்களையும் மதுரைக்குக் கொண்டுசெல்லவும், அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லவும் இந்த ரயில்சேவை ஏதுவாக இருந்தது. சென்னை மற்றும் வடமாநில ரயில்களைப் பிடிக்கவும், அதுபோல் கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வோருக்கும் இந்த ரயில் சேவை மிகவும் உதவிகரமாக இருந்தது. 

“இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும், அகல ரயில் பாதையாக மாற்றியதால், கடைசியாக 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை - போடி இடையே ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தண்டவாளங்கள் பிரித்து எடுக்கப்பட்டன. 'மற்ற ஊர்களைப்போல தேனியிலும் அகல ரயில்பாதை வேலைகளை முடித்து சீக்கிரம் ரயில் விட்டு விடுவார்கள்' என்று தேனி மாவட்ட மக்களும், செக்கானூரணி, உசிலம்பட்டியை உள்ளடக்கிய மதுரை மாவட்ட மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், இத்திட்டத்துக்காக, அப்போதிருந்த மத்திய அரசு  இதற்காக 280 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

'நான்கு ஆண்டுகளில், பணிகள் முடியும்' என்றார்கள். ஆனால், நான்கு ஆண்டுகளும் நிதி ஒதுக்காததால், 2015-ஆம் ஆண்டில்தான் பணிகள் தொடங்கின. ஆனால், இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் சிறிய அளிவிலான தொகையே ஒதுக்கப்பட்டு வந்ததால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ லாசர் தலைமையில், 'போடி - மதுரை அகல ரயில்பாதை திட்ட அமலாக்கக்குழு' என்ற பெயரில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு பல போராட்டங்களை நடத்தினார்கள். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து மனுவும் கொடுத்தனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்குசேகரிக்க வந்த ஜெயலலிதா, அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால், போடி-மதுரை ரயில் சேவைக்கு மத்திய அரசிடம் போராடி நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், வெற்றிபெற்ற பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது போடி தொகுதி எம்எல்ஏ-வாக உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்தும் போடி - மதுரை அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்கின்றனர் தேனி மாவட்ட மக்கள்.

தேனி மாவட்ட வியாபரிகள் சங்கம்

இந்த நிலையில்தான் மதுரை-போடி அகல ரயில்பாதை பணிக்காக 19.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல், "இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும்" என்கிறார்கள் அதிகாரிகள். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி இடையேயான 21 கிலோமீட்டர் பாதை அகலப்படுத்தப்படும் என்றும், சிறு பாலங்கள் கட்டவும், தேனி-போடி இடையே உள்ள கர்டர் பாலத்தை அகற்றிவிட்டு 18.3 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. இப்பணிகளை, ஒன்பது மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தற்போதைய தேனி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. உட்பட இரண்டு மாவட்ட  எம்.பி.க்களும்  இதுபற்றி எந்த இடத்திலும் வாய் திறப்பதில்லை. பொதுமக்களும், சமூக அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும்தான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். "விவசாய வர்த்தகம் நிறைந்த தேனி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்றுமதி, இறக்குமதி எனச் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுவருகிறது. இவை அனைத்தும் லாரிகளில் அனுப்பப்பட்டு வருவதால், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கூடுதல் செலவாகிறது. அகல ரயில்பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட்டு சரக்கு ரயில் இயக்கப்பட்டால் 50 சதவீதம் செலவு குறைக்கப்பட்டு விவசாயிகள், வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலமாகவும் ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்" எனப் பல சாத்தியங்களைக் கூறுகிறார்கள் அவர்கள். "தற்போது மதுரை-போடி ரயில்பாதை வேலைகளை விரைந்து முடிக்க பி.ஜே.பி. தேசியச் செயலாளர் எச்.ராஜா, ரயில்வே வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார், அதனால்தான், தற்போது நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் போடி-மதுரை ரயில் பாதையில் ரயில்கள் ஓடும்'' என்று மதுரை மாவட்ட பி.ஜே.பி. முன்னாள் தலைவர் ராஜரத்தினம் தெரிவித்தார். 

தேனி ரயில் நிலையம்

மதுரை - போடிக்கு ரயில் இயக்கப்படும் நாளை, இரண்டு மாவட்ட மக்களுமே மிகுந்த  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதேபோல் கடந்த 60 ஆண்டுகளாக திண்டுக்கல்–குமுளி இடையேயான ரயில் திட்ட ஆய்வுப்பணி தொடக்க நிலையிலேயே உள்ளது. காரைக்குடி - மயிலாடுதுறை இடையேயான அகல ரயில்பாதை பணியும் முடிவடையாமல் உள்ளது. இதற்கெல்லாம் எப்போது விடிவு பிறக்கும்...? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close