Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊர் முழுக்க எண்ணெய்... ஆனா, பால் வாங்க 6 கிலோமீட்டர்...! கதிராமங்கலம் இன்று

கதிராமங்கலம்

திராமங்கலத்தில் ஏழாவது நாளாகக் கடையடைப்பு, மூன்றாவது நாளாக ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பள்ளி மாணவர்கள் கறுப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் எனத் தினந்தோறும் கதிராமங்கலம் கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள். ஆனால், தஞ்சை மாவட்ட ஆட்சியரோ "கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு இல்லை; அங்கு இயல்புவாழ்க்கை திரும்பியுள்ளது. மக்கள் அச்சப்படத்தேவையில்லை. கதிராமங்கலம் மக்களின் அச்சத்தைப்போக்கும்வகையில் விரைவில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

கலெக்டர் அறிவிப்புக்குப் பிறகு கதிராமங்கலத்தில் என்ன நடந்தது தெரியுமா?

கதிராமங்கலம் மணல்மேடு அருகேயுள்ள அய்யனார் கோயில் தெருவில் சமைப்பதற்காகப் பெண்கள், காலையில் தண்ணீர் பிடித்துள்ளனர். அந்தத் தண்ணீரில் எண்ணெய் கலந்து வந்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், மிகுந்த பதற்றம் அடைந்தனர். இதையடுத்து மீண்டும் அந்தக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த கல்லூரிசிவக்குமார் மாணவர்களும் அவர்களுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த சிவக்குமாரிடம் பேசினோம்.

"எங்கள் ஊரில் 12 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இவர்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆரம்ப காலத்திலிருந்தே கைத்தறி நெசவுத்தொழில் செய்து வந்தோம். இப்பகுதி விவசாயம்சார்ந்த பகுதியாக இருந்தாலும், பாரம்பர்ய தொழிலான நெசவுத்தொழிலைத்தான் பிரதானமாகச் செய்து வந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்துபோனதால், நெசவுத்தொழிலைக் கைவிடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். நெசவுத்தொழில் போனாலும் பரவாயில்லை; எங்கள் மண்ணும், வயலும் இருக்கிறது என்ற தைரியத்தில் இருந்தோம்.

விவசாயம்செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று வாழ்ந்து வந்த எங்களுக்குத் திடீரென்று இடிவிழுந்ததுபோல, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஆழ்குழாயை இறக்கி எங்கள் வாழ்வாதரத்தையே தொலைத்துவிட்டார்கள். இதனால் தினம் தினம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெசவுத்தொழில் இல்லையென்றாலும் விவசாயக் கூலிவேலைக்குப் போனோம், இப்போ அதுவும் இல்லாமல் செய்துவிடுவார்களோ என்று அச்சத்தில் இருக்கிறோம். குடிதண்ணீரில் எண்ணெய் கலந்து வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு ஏழு நாள்கள் ஆகிவிட்டன. கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. குழந்தைகளுக்குப் பால், அரிசி வாங்குவதென்றால்கூட ஆறுகிலோ மீட்டர் தொலைவுக்கு, பக்கத்துக் கிராமத்திற்குச் சென்றுதான் வாங்கவேண்டி உள்ளது. அன்றாட வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிப்போய் கிடக்கிறது" என்றார்.

கதிராமங்கலம்

கதிராமங்கலத்தைச் சேர்ந்த பெண்களிடம் பேசினோம். "விஷம் கலந்த குடிதண்ணீர் மற்றும் விவசாய நிலத்தில் எண்ணெய் படர்ந்து கிடக்கிறது. அந்தப் பக்கம் போனாலே துர்நாற்றம் வீசுகிறது. அமைதியாக இருந்த எங்கள் ஊரில் ஒரே சத்தம், இரைச்சலாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய்விட்டது. இனிமேலும் எங்களால் பொறுமையாக இருக்கமுடியாது. இது மக்களோட வாழ்வாதரப் பிரச்னை. தண்ணீர் இல்லையென்றால் நாங்கள் எங்கே போவது? இதுபோன்ற மக்கள் பிரச்னைக்குக்கூட கலெக்டர் வரவில்லையென்றால், எதற்குத்தான் வரப்போகிறார்?" என்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close