Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கிரண்பேடிக்கும் எங்களுக்குமான பிரச்னைக்கு அ.தி.மு.கதான் காரணம்” – புதுச்சேரி காங்கிரஸ் கலகலப்பு...

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி பதவியேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குமான அதிகார மோதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நகராட்சி ஆணையர் இடமாற்றம், செண்டாக் விவகாரத்தில் வெடித்த பிரச்னை சற்று குறைந்திருந்த நிலையில், காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி மூன்று பா.ஜ.க-வினர் எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் மீண்டும் பற்றியெரியத் தொடங்கியிருக்கிறது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த காங்கிரஸ், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில்,  நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, “மக்களால் புறக்கணிக்கப்பட்டு, டெபாசிட்டைப் பறிகொடுத்த பா.ஜ.க-வினர் எம்எல்ஏவாக்கப்பட்டு இருக்கின்றனர். பா.ஜ.க-வினரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் கொல்லைப்புறமாக எம்எல்ஏவாக்கப்பட்டு இருக்கின்றனர். விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியவில்லை. அதேசமயம் உ.பியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கின்றனர். புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்கிறது பா.ஜ.க. ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்டமாக காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளில் பா.ஜ.க ரெய்டு நடத்தும். எந்த ரெய்டையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கவர்னர் கிரண்பேடிக்கும் எங்களுக்கும் பிரச்னை ஏற்பட அ.தி.மு.கதான் காரணம். அ.தி.மு.க. எம்எல்ஏ-வின் உரிமையை ஆளுநர் பறித்ததால்தான் ஒட்டுமொத்த சட்டமன்றமும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. ஆனால், அவர்கள் வாரியத் தலைவர் பதவிகளை நிரப்பக்கூடாது என்று அதே ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள்” என்றார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், “ஆளுநர் பதவியேற்ற புதிதில், 'ராஜ்பவன் கதவுகள் எப்போதும் மக்களுக்காக திறந்திருக்கும்' என்று கூறினார். ஆனால், தற்போது நியமன எம்எல்ஏ-க்களுக்கு ரகசியப் பதவிப் பிரமாணம் செய்துவைத்திருப்பதன் மூலம் தான் ஒரு பா.ஜ.க ஏஜென்ட் என்பதை நிரூபித்திருக்கிறார். சமூக சேவை என தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு 10 நிமிடம் குப்பை வாருவதுபோல போஸ் கொடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார். கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது கூட மத்தியில் காங்கிரஸ் அரசுதான் இருந்தது. ஆனால், மூன்று எம்எல்ஏ-க்களை நாங்கள் நியமிக்க முயற்சிக்கவில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி சட்டப்படிதான் செயல்படும்” என்றார்.

மாலையில் டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். அப்போது, “எம்எல்ஏ-க்கள் விஷயத்தில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கின்றது. நமது ஆளுநரும் டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைவர்களும் இணைந்து, புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று பா.ஜ.க. நிர்வாகிகளை எம்எல்ஏ-க்களாக நியமித்திருக்கின்றனர். அதில் ஒருவர் 2016 புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 1,412 வாக்குகள் வாங்கி டெபாசிட் இழந்தவர். மூன்றுமுறை போட்டியிட்டு தோல்வியுற்ற அவர் மூன்று முறையும் டெபாசிட் இழந்திருக்கிறார். அதே தேர்தலில் மொத்தம் பா.ஜ.க. சார்பில் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அவர்கள் அனைவருமே 500, 300, 100 வாக்குகள் என வாங்கி டெபாசிட்டைப் பறிகொடுத்தனர். நியமன எம்எல்ஏ-க்களில் இன்னொருவர் பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர். அவருக்கு வாக்களர் பட்டியலில் பெயரே இல்லையாம். இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தனது பள்ளியை வழங்கும் செல்வகணபதி. சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட இல்லாதக் கட்சி தற்போது கொல்லைப் புறமாக மூன்று எம்எல்ஏ-க்களை நியமித்திருக்கிறது. புதுச்சேரியில் கொல்லைப்புறமாக நுழைய முயற்சி செய்யும் பா.ஜ.க-வின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று முடித்தார்.

படங்கள்: அ.குரூஸ்தனம்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close