Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘இது ஆதாரமற்ற, விஷமத்தனமான குற்றச்சாட்டு!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பாயும் பால் முகவர்கள்

ராஜேந்திர பாலாஜி

பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிளப்பிய விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயாது போல. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த விவகாரத்தின் சூடு இன்னமும் தணியவில்லை. ராஜேந்திர பாலாஜி டு தனியார் பால் நிறுவனங்கள், வைகைச்செல்வன், பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் என்று பல்வேறு ரூபங்களில் மோதலாக வெடிக்க, அதன் உச்சக்கட்டமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிர வைத்திருக்கிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி. 

தனது சங்கத்தின் சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான இரா. தனசேகர் மூலமாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு அவர் அனுப்பி இருக்கும் வக்கீல் நோட்டீஸின் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"தமிழகம் முழுவதும் சேவைசார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டுவரும் பால் முகவர்களின் நலனை பேணிக்காப்பதற்காக எனது கட்சிக்காரரான சு.ஆ.பொன்னுசாமி, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 2008-ம் ஆண்டு மே மாதம், பால் முகவர்கள் சங்கத்தினை நிறுவி, தொடர்ந்து பால் முகவர்களுக்காகவும், பொதுமக்கள் நலன் சார்ந்தும் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து அவர் பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் நலனையும் கருத்தில்கொண்டு 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எனும் பெயரில் இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ், சங்கத்தினை முறையாகப் பதிவுசெய்து பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து செயலாற்றி வருகிறார். 

இந்நிலையில்,கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனக் கலப்படம் செய்கின்றன. தனியார் நிறுவனங்களின் பாலினைக் குடிப்பதால் புற்றுநோய் வருகிறது' என பொத்தாம் பொதுவாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளார். இதனால், பொதுமக்களோடு நேரடித்தொடர்பில் இருக்கும் பால் முகவர்களின் பிரதிநிதியாக விளங்கிவரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் என்கிற முறையில் கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் எனும் பெயரில் ஆதாரமற்ற வகையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சரின் பேச்சுக்கு, எனது கட்சிக்காரர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனை பொறுக்க முடியாத தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினை 'டூப்ளிகேட் சங்கம்' எனவும், 'அதன் தலைவர் பொன்னுசாமி பால் முகவரே அல்ல. அவர் ஒரு டுபாக்கூர், தனியார் இரா. தனசேகர்பால் நிறுவனங்களுக்கும்,கலப்பட பால் நிறுவனங்களுக்கும் புரோக்கராக, இடைத்தரகராக இருப்பவர்' எனவும், 'தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும்' அடுக்கடுக்காக ஆதாரமற்ற, விஷமத்தனமான  குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி ஊடகங்களில் பேசியிருக்கிறார்.

இதன்காரணமாக எனது கட்சிக்காரர்களான அச்சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி, மாநில பொதுச்செயலாளர் கே.எம்.கமாலுதீன், மாநில பொருளாளர் எஸ்.பொன் மாரியப்பன் ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள், பால் முகவர்கள் என அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினைப் பற்றியும், அதன் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குறித்தும் மிகவும் அவதூறாகவும், விஷமத்தனமாகவும் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒருவார காலத்திற்குள் தான் பேசிய பேச்சுக்களை திரும்பப்பெற வேண்டும். மேலும், அவ்வாறு பேசியமைக்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யத்தவறும் பட்சத்தில், எமது கட்சிக்காரருக்கும், மேற்படி சங்கத்திற்கும் உள்ள நற்பெயருக்கு களங்கமிழைக்க முனைந்தமைக்காகவும், நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கினை தாக்கல் செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியப்படுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

ஆறு பக்கங்களைக் கொண்ட வழக்கறிஞர் நோட்டீஸ் ஜூன் 6-ம் தேதியன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பால் கலப்பட விவகாரம் அமைச்சருக்கு எதிராக பாலாக கொதிக்கத் தொடங்கி இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close