Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அதிமுக இணைப்பை காலம்தான் முடிவு செய்யும்..! - கதவைச் சாத்திய திண்டுக்கல் சீனிவாசன்

அ தி மு க

அ.தி.மு.க வின் இரு அணிகள் இணைவதை இனி காலம்தான் முடிவு செய்யும் என திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் தெரிவித்தார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அகில இந்திய சீனியர் கபடிப்போட்டி நேற்று துவங்கியது. முன்னாள் அமைச்சர் சிவபதி தலைமையில் நடந்த இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் இந்தப் போட்டியை துவங்கி வைத்தனர்.

அகில இந்திய அளவில் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் அகில இந்திய அளவில் 23 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் கலந்துக்கொண்டன. ஆண்கள் பிரிவில் மேற்கு வங்காளமும், தமிழக அணியும் மோதின. இந்தப்போட்டியில் 48க்கு 1 என்கிற புள்ளியில் தமிழகம் வென்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள இறுதிப்போட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியில் இருக்கும்” என்றார். தொடர்ந்து பேசும்போது, “விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றது. திறமையான வீரர்களை ஊக்கப்படுத்த அரசு தயாராக உள்ளது” என்றார். விளையாட்டு வீரர்கள் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுப்பதை தவிர்க்கவும் அரசு ஆலோசனை செய்து வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த கபடி போட்டி

“தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட வல்லுநர் குழு விரைவில் ஆலோனைக்கூட்டம் நடத்த உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டமும் அடுத்த வாரத்தில் நடக்கும்”என்றார்.

அப்போது “அ.தி.மு.க அணிகளை இணைக்க, புதியக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே, என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். “அப்படி எதுவும் அமைக்கப்படவில்லை. அவர் தவறாக சொல்லியிருக்கிறார்” என்றார். தொடர்ந்து, “அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதற்காக, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக, எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதே?” என்றதற்கு, “இது கற்பனையான ஒன்று. அதற்கு வாய்ப்பில்லை என்றார். “அ.தி.மு.கவின் அணிகள் இணைய வாய்ப்புகள் உண்டா.? என்ற கேள்விக்கு, “இணைப்புக்குழு கலைக்கப்பட்டது என ஓ.பி.எஸ்ஸே சொல்லிவிட்டாரே, இரு அணிகளும் இணைவது பற்றி இனி காலம்தான் முடிவு செய்யும். இதுகுறித்து ஓ.பி.எஸ்.ஸிடமே கேளுங்கள்” என விரக்தியாக சொல்லியபடிக் கிளம்பினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், இதே நிகழ்ச்சிக்கு வரும் ஞாயிறன்று எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close