Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''கட்சி வேறு; ஆட்சி வேறு” முதல்வர் நாராயணசாமியின் அடடே விளக்கம்

ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி, “ஆட்சி வேறு கட்சி வேறு. முழு அடைப்புக்கு கட்சி ஆதரவுகொடுக்கலாம். ஆனால், ஆட்சி ஆதரவு கொடுக்காது” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி  மூன்று பா.ஜ.க நிர்வாகிகளை நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. அன்றைய தினமே பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் தெரிவிக்காமல், அவர்களுக்கு ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் கிரண்பேடி. இதற்கு, ஆளும் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து தி.மு.க., கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் உட்பட தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய நிலவரம்குறித்து எங்கள் கட்சித்  தலைமையிடம் தெரிவித்துள்ளேன். நியமன எம்எல்ஏ-க்களை நேரடியாக நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.  விதிமுறைகளை மீறி, மத்திய அரசு மூன்று எம்எல்ஏ-க்களை நியமித்துள்ளது.  இதையடுத்து, அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், ரகசியமாக ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நியமன உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும், சபாநாயகர்தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். எனவே, இந்தப் பதவிப் பிரமாணம் செல்லாது. இது தொடர்பாக, மத்திய உள்துறை, பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவரை சந்தித்துக் கூறியிருக்கிறேன். இளம் தலைவர் ராகுல் காந்தி, இந்தப் பிரச்னையை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படை தொடர்ந்து இடையூறு செய்துவருகிறது. தமிழகத்தின் 120 படகுகள், 12 காரைக்கால் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளைச் சிறைபிடித்துள்ளனர். இதில், மத்திய அரசு மெத்தனமாக இல்லாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு கொண்டுவர உள்ள தீர்மானத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்” என்று தெரிவித்தவரிடம், “அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை, கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அவர், “கட்சி வேறு ஆட்சி வேறு. முழு அடைப்புக்கு கட்சி ஆதரவு கொடுக்கலாம். ஆனால் ஆட்சி ஆதரவு கொடுக்காது. ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கைக் கடைபிடிக்காமல் இருந்தால், நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என யார் பாதுகாப்பு கேட்டாலும் கொடுக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்” என்றார்.

”முதல்வர் நாராயணசாமி பந்த்துக்கு அரசு ஆதரவு தரவில்லை என்று சொல்கிறார். ஆனால், அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. அனைவருக்கும் பாதுகாப்புத் தரப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார், நகரத்தின் பல பகுதிகளில் போராட்டம் என்ற பெயரில் டீ கடை, பெட்டிக் கடை எனப் பல்வேறு கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடி இருக்கிறார்கள். இதுதான் பாதுகாப்பா” என்று கடந்து செல்கின்றனர் பொதுமக்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close