Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடிக்கணக்கில் கட்டணம்... மருத்துவ மாணவர்களை கலங்கடிக்கும் நிகர்நிலை கல்லூரிகள்

இந்திய மருத்துவ கவுன்சில், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான உச்சபட்ச கட்டணமாக ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது. இது தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் பெரிய அளவில் கட்டணத்தை உயர்த்துவதற்கு வழிசெய்துள்ளது. 

நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைக் கல்லூரிகளிலும் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை நடைமுறைப்படுத்தவே நீட் தேர்வை அகில இந்திய அளவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், கட்டணம் எவ்வளவு என்பதைச் சொல்லவில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும்  மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டன.

இந்த கட்டணக்கொள்ளையை எதிர்த்து நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நிகர்நிலை கல்லூரிகளின் இணையத்தளத்தில் மருத்துவ படிப்பு கட்டணத்தைத் தெரிவிக்க வேண்டும். இதனை மருத்துவ கவுன்சில் கண்காணிக்க வேண்டும், ஒரு உச்சவரம்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவக் கவுன்சில் உச்சவரம்பு தொகையாக 25 லட்சம் ரூபாய் நிர்ணயித்தது. உடனே அனைத்து நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் தங்களுடைய கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு கல்லூரியின் கல்வி கட்டணத்தையும் பார்க்கும்போது, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஏழை மாணவனால் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

நீட் மதிப்பெண் அடிப்படையில் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை கொண்டு வந்ததை நல்ல விஷயமாகப் பார்த்தவர்கள் தற்போது அறிவித்துள்ள கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்தியாவில் மொத்தம் 38 நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 9 கல்லூரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு 18.5 லட்சம் ரூபாய் முதல் 22.5 லட்சம் ரூபாய் வரை கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் 22.5 லட்ச ரூபாய். ராமச்சந்திர மருத்துவக் கல்லூரியில் 22 லட்ச ரூபாய், செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மருத்துவக்கல்லூரியில் 22 லட்சம் ரூபாய், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 21 லட்சம் ரூபாய், சவிதா மருத்துவக் கல்லூரியில் 19.5 லட்சம் ரூபாய், சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் 19.5 லட்சம் ரூபாய், ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் 19 லட்சம் ரூபாய், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 18.5 லட்சம் ரூபாய், சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் 18 லட்சம் ரூபாய் என மருத்துவக் கல்விக் கட்டணத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன.

மருத்துவக் கல்வி கட்டணத்தைத் தவிர, ஆய்வக கட்டணம், நூலக கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என இதர கட்டணத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள். எல்லாக் கட்டணத்தையும் சேர்த்தால் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஐந்து வருடப் படிப்புக்கு ஒரு மாணவர் 1.25 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

கடந்த ஆண்டில் பெற்ற கேப்பிட்டேஷன் தொகையுடன், ஐந்து வருடக் கல்வி கட்டணமும் சேர்த்தால்கூட இந்தளவுக்குப் பெரிய தொகை வராது. தமிழ்நாட்டைத்தவிர, பிற மாநிலங்களில் கூட இந்தளவுக்குக் கட்டணம் இல்லை. கேரளாவில் உள்ள அமிர்தா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி 15 லட்சம் ரூபாய், கர்நாடகாவில் உள்ள மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் 10.30 லட்சம் ரூபாய், எஸ்டியூ மெடிக்கல் கல்லூரியில் 9 லட்ச ரூபாய் மட்டுமே  கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள்நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் கட்டண உயர்வு குறித்து மாற்றம் இந்திய தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் தலைவர் 'பாடம்' நாராயணன்  கூறுகையில், "இதுநாள்வரை கேபிட்டேஷன் கட்டணம் என்று சட்டத்துக்கு மறைமுகப் பணத்தை பெற்று கொள்ளை அடித்தார்கள். இதனைத் தடுக்கவே நீட் தேர்வை கொண்டு வந்தது உச்சநீதிமன்றம். ஆனால், தற்போது சட்டப்பூர்வமாக கொள்ளை அடிப்பதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளையடிக்க தயாராகி வருகிறார்கள். இதை அரசு தடுக்க நிறுத்த வேண்டும். 

தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலை கல்லூரிகளும் அறக்கட்டளை அமைப்பின் கீழ் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு அரசும் பல்வேறு உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி இருக்கிறது. வரிச் சலுகைகளையும் பெறுகிறார்கள். இவர்கள் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை வழங்கும் தன்னார்வு தொண்டு நிறுவனமாகச் செயல்பட வேண்டும். ஆனால் கொள்ளைக்காரர்களாக செயல்படுபவர்களாக மாறி இருக்கிறார்கள். 

நமக்கு அண்மை மாநிலங்களாக உள்ள கேரளாவிலும், புதுச்சேரியிலும் மாநில அரசுகளே தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளுக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. தமிழ்நாட்டிலும் அந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டும். மருத்துவக் கல்வி கட்டணத்தை சீர்ப்படுத்துவதற்கே உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்கள், என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கட்டண நிர்ணயம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அதிகபட்சமாக  பத்து லட்சத்துக்குள் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேரும்போது கடனுதவி செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழை மாணவனும் மருத்துவக் கல்வியைப் பெறமுடியும்" என்றார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ஓராண்டு கட்டணம் 13600 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் 11600 ரூபாய். அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஓராண்டு கட்டணம் அதிகபட்சமாக நான்கு லட்சம் ரூபாய். நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ. 12.5 லட்சம் மட்டுமே. இதுவே அரசு ஒதுக்கீட்டில் தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேரும் போது ரூ. இரண்டரை லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு ஆறு லட்ச ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். 

மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் 1,628 ரூபாய் மட்டுமே. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் 2,400 ரூபாய் மட்டுமே. தனியார் நிகர்நிலை கல்லூரிகளிலும், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள கட்டணங்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாய் இருக்கின்றன. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற அரசு உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close