Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இடமாற்றம்... மு.க.ஸ்டாலின் கண்டனம்!

செம்மொழித் தமிழாய்வு மையத்தை இடமாற்றம்செய்யும் மத்திய அரசின் முயற்சிக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

சென்னையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு, தமிழ் மொழி சார்ந்த பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதனிடையே, நிதிஆயோக் ஆலோசனையின் அடிப்படையில், மத்திய அரசு சென்னையில் சுயேச்சையாக இயங்கிவரும் மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை மூடிவிட்டு, இதைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, ஆய்வு மையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய அரசை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

ஸ்டாலின்

இந்நிலையில், இது குறித்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்தித் திணிப்பில்’ மதம்பிடித்த யானைபோல அடங்காத ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் மத்திய பா.ஜ.க. அரசு, செம்மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்குத் தீங்கு விளைவிக்கும் காரியங்களிலும் ஈடுபட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். தமிழைக் குறைத்து மதிப்பிட்டு, மட்டம்தட்டும் தரக் குறைவான காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது, தமிழ் மொழி மீது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு இருக்கும் தீராத காழ்ப்புணர்ச்சியையும், பாகுபடுத்தும் துவேஷ மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.

ஆகவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்திற்கு மாற்றும் முயற்சியை, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், அதற்கு மறைமுகமாக திரைமறைவில் உதவும் அ.தி.மு.க.வின் ’குதிரை பேர அரசும்’ செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியைச் சூறையாடும் போக்கில் செயல்படுவதை நிறுத்திக்கொண்டு, இந்த நிறுவனம் முழுநேர இயக்குநர் மற்றும் முழு நிதியுதவியுடன், தமிழாராய்ச்சிப் பணிகளில் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கிளர்ச்சி வழியைத் திறந்துவிட்டுத் தூண்ட வேண்டாமென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close