Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''வேண்டும் வேண்டும் டாஸ்மாக் வேண்டும்!'' - அதிரவைத்த மக்கள் போராட்டம்

டாஸ்மாக் எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்

திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியில் புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த சில பொதுமக்கள், 'சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கூடாது' என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

திருப்பூர் மாவட்டம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அப்பகுதியில் நரிக்குறவர் இன மக்களும் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நரிக்குறவர் இன மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே  தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதியதாக டாஸ்மாக் கடை ஒன்றைத் திறந்தது. மேலும் இதன் அருகிலேயே கோயில்கள், பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்திருக்கும்போது, இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியது. எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்கரை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில மணி நேரங்கள் தொடர்ந்த இப்போராட்டத்தை காவல்துறையினரும், டாஸ்மாக் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தங்கள் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை விரைவில் மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், அதே நேரம் பழங்கரை பகுதியில் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண்கள் உள்ளிட்ட சிலர் பழங்கரை பெரியாயிபாளையம் பிரிவு என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

போராட்டம் நடத்திய மக்கள்

'டாஸ்மாக் கடையை மூட வேண்டாம்' என்ற கோஷத்துடன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்களிடம் பேசியபோது,

"இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் கடை மூடப்பட்டால், எங்கள் வீட்டு ஆண்கள் மது குடிப்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வெகு தூரம் சென்று குடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும்வரை, நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிக்கொண்டு வந்தாலும் காவல்துறையினர் பிடித்து பணம் பறிக்கின்றனர். இதனால் தேவையற்ற சிரமங்களும், அதிகப்படியான பொருளாதார இழப்புகளும்தான் எங்களுக்கு ஏற்படுகிறது. வீட்டுக்கு அருகிலேயே மதுக்கடை இருந்தால் எந்த பிரச்னையுமின்றி நிம்மதியாகக் குடித்துவிட்டு விரைவாக வீட்டுக்கு வந்துவிடுவார்கள். எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் நிர்வாகம் இந்த பழங்கரை மதுக்கடை தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்'' என்றனர் கோரஸாக. பின்னணியில் நின்றுகொண்டிருந்த அவர்களது கணவன்மார்களும் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக தலையசைத்துக் கொண்டிருந்தனர்.

எனவே, பழங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் கடைக்கு பூட்டு போடலாமா... வேண்டாமா என்று குழம்பிப்போய் இருக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close