Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எத்தியோப்பியாவைப்போல மாறுகிறது அரியலூர்! அதிரவைக்கும் தகவல்!

"1990-ம் ஆண்டிலிருந்து அதிக அளவிலான கனிமவளக் கொள்ளைகள் அரியலூர் மாவட்டத்தில் நடந்துவருகிறது. ஆனால், இன்று வரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அழிவின் விளிம்பில் இருக்கும் எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். இதற்குக் காரணமான சிமென்ட் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் சேவை இயக்கம், பேரழிவுக்கு எதிரான பேரியக்கம், காங்கிரஸ் கட்சி எனப் பல விவசாய சங்கத்தினர் அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் பேசிய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முக சுந்தரம், "அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும் 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யும் சிமென்ட்டுகளை வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். அரியலூர் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக இருந்தாலும் அதிக வருமானம் தரக்கூடிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் இது. தற்போது வாழவே தகுதியில்லா நகரமாக மாறிவருகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த நகரமே அழிந்து விடும் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளது உண்மை அறியும் குழு.

இதற்கு என்ன காரணமென்றால், இங்குள்ள சிமென்ட் ஆலைகள்தான். ஒரு நாளைக்கு அரசு சிமென்ட் ஆலையில் மட்டும் 11 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது ஆலையை விரிவுப்படுத்த போவதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு பத்து சிமென்ட் ஆலைகள் உள்ளன. அரியலூர் மாவட்டத்தை மையப்படுத்தி மூன்று முறை நிலநடுக்கம் வந்துள்ளன. திருச்சி, கடலூர், சேலம், துறையூர் போன்ற ஊர்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதை வரலாற்றுத்துறை ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ராம்கோ, சங்கர், இந்தியா சிமென்ட் போன்ற தனியார் சிமென்ட் ஆலைகள் விவசாயிகளிடம் குறைந்த விலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தியபோது, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் என்னவென்றால், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவமனை, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித்தருகிறோம், குடிநீர் வசதி,தடையற்ற மின்சாரம்  கொடுக்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். இதில் எதையும் செய்யவில்லை. இதனை உடனே செய்யவேண்டும். இல்லையேல் சிமென்ட் ஆலைகளுக்கு எதிராக  மக்கள் திரட்டி தமிழக முதல்வர் எடப்பாடியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போகிறோம்" என்று முடித்தார்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன் பேசுகையில், "1990-ம் ஆண்டில் இருந்து மிகப்பெரிய அளவில் கனிமவள கொள்ளை அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இங்குள்ள அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வது கிடையாது. காரணம், சம்மந்தபட்டவர்களுக்கு எல்லோருக்கும் பொட்டி போய்கொண்டிருக்கிறது. இந்த கொள்ளையை தடுக்க அரசு தனி குழு அமைத்து விசாரிக்கவேண்டும். ஒழுங்கான விசாரணை நடந்தால், அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் சிக்குவார்கள். அதுமட்டுமல்லாமல், இம்மாவட்டத்தில் பல ஏரி, குளங்கள் தூர்வாராமல் கிடக்கிறது. மழை காலத்துக்கு முன்பே தூர்வாரினால் இம்மாவட்டம் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கும். இல்லையேல், எத்தியோப்பியாவை போன்று அரியலூரும் காட்சியளிக்கும்" என்று எச்சரித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close