Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காய்கறிகளைத்தான் சாப்பிட முடியும், எரிவாயுவை அல்ல...' குமுறும் நெடுவாசல் மக்கள்!

பருவமழை பொய்த்து, வறட்சியால் படாதபாடு பட்டுவரும் விவசாயிகளை, மேலும் அவதிக்குள்ளாக்கும் திட்டங்களை, காவிரி டெல்டா நோக்கி அனுப்பி வருகிறது. மத்திய அரசு. நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய இரண்டு கிராமங்களும் போராட்டக் களங்களாக மாறியுள்ளன. கதிராமங்கல மக்கள் மீது காவல்துறையை ஏவிய நிலையில், நெடுவாசலில் 88-வது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது. 

Neduvasal

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, அந்தக் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மத்திய அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், போராட்டம் வாபஸ் பெற்ற பிறகு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிடப்பட்டதால், அங்கு மீண்டும் போராட்டம் தொடங்கியது.

தினசரி, பல்வேறு போராட்டங்களை நெடுவாசல் மக்கள் முன்னெடுத்துவருகின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு அல்வா கொடுப்பது, ஒப்பாரி வைப்பது, அரசின் வாக்குறுதியைத் தண்ணீரில் எழுதுவது என்று நூதனப் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். காலை 10 மணிக்கு கூடும் மக்கள், மாலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அங்கேயே சமைத்துச் சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் மக்களின் உறுதி வலுவடைந்துகொண்டே இருக்கிறது.

தினமும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டக்களத்தில் குவிகின்றனர். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராடுகின்றனர். "போராட்டம் தொடங்கிய ஆரம்ப நாள்களில், அதிகாரிகள் வந்தனர். ஆனால், தற்போது அதிகாரிகள் யாரும் எட்டிக்கூட பார்ப்பதில்லை" என்று குமுறுகின்றனர் போராட்டக்காரர்கள். 

Neduvasal Protest

இதனிடையே, 'மக்கள் எதிர்க்கும் ஹைட்ரோ கார்பன் உட்பட எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படாது' என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், 'எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால்தான் போராட்டம் கைவிடப்படும்' என்று மக்கள் உறுதியான குரலில் தெரிவிக்கின்றனர்.

இதை வலியுறுத்தியே, இன்றைய போராட்டத்தை மக்கள் தொடங்கினர். மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் போன்று இருவர் வேடமிட்டுக்கொண்டனர். இதில், மாநில அரசு போன்று வேடமிட்டிருந்தவர், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசிடம் வழங்கினார். இதைப் போன்று, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் கைவிடப்பட்டது என்று அரசாணை வெளியிட வேண்டும் என்றும் நெடுவாசல் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதுகுறித்து , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீர செல்வம் என்பவரிடம் பேசினோம், " 'மக்கள் எதிர்க்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்' என்று மாநில அரசு கூறுகிறது. 'மாநில அரசு எழுத்துப் பூர்வமாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயார்' என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். 

அதேபோல, அரசாணையும் வெளியிட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். நாங்கள் , தமிழக அரசை நம்பத் தயாராக இல்லை. சுனாமி, வர்தா புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது, தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கவனித்தோம். ஆகையால், இந்தத் திட்டம் வந்தால், நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். இது, விவசாய நிலம். எனவே, பாலைவனம் அல்லது கடல் பகுதி அருகே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திக்கொள்ளுங்கள்.

கதிராமங்கலம் போன்று இங்கு காவல்துறையைவிட்டு எங்களை ஒடுக்கவில்லை. ஆனால், போராட்டத்துக்கு வரும் வெளியூர் நபர்களை, காவல்துறையினர் ஊருக்குள் அனுமதிப்பதில்லை. வளைகுடா நாடுகளில் இருக்கும் எங்களது நண்பர்களுக்கு, இதனால் ஏற்படும் பாதிப்புகள் நன்றாகத் தெரியும். அவர்கள், ஒருபோதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாதீர்கள் என்று கூறுகின்றனர். பால், காய்கறி போன்றவற்றைத்தான் சாப்பிட முடியும். எரிவாயுவை சாப்பிட முடியாது. விவசாய நிலங்களை வீணடிக்காதீர்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அடுத்த கட்டமாக, வருகின்ற 15-ம் தேதி புதுக்கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 70 கிராமங்களைச் சேர்ந்த, 50 ஆயிரம் மக்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், இதற்கு புதுக்கோட்டை எஸ்பி அனுமதி தரவில்லை. நாங்கள் அனுமதி கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளோம்" என்று முடித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close