Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுமைதூக்கும் தொழிலாளர்களின் சுமைகளை இறக்கி வைக்குமா? 45 ஆண்டுகளாகப் போராடும் அவலம்

சுமைதூக்கும் தொழிலாளர்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய அரசு உத்தரவிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வரும் 24ஆம் தேதி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், கடந்த 45 ஆண்டுகளாகப் பணியாற்றினாலும் இதுவரை யாரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால், பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பத்து ஆண்டுகளாகப் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள், பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கடந்த 1.5.1997ல் அப்போதைய முதல்வர் அறிவித்தார். இதுதொடர்பாக 2.1.1998ல் அரசுச் செயலாளர் ராமு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநருக்கு சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், இதுவரை யாரையும் பணிநிரந்தரம் செய்யவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

தலைவர் வீரராகவன், பொதுச் செயலாளர் சரவணன், பொருளாளர் பாஸ்கரன்இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்குவோரின் மாநிலப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வீரராகவன், பொதுச் செயலாளர் சரவணன், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறுகையில், "கடந்த 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி வருகிறோம். பணிநிரந்தரம், ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 45 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். இந்தச் சூழ்நிலையில் 1997ல் எங்களைப் பணிநிரந்தரம் செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். அதிலும் சில ஆண்டுகள ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 60 சதவிகித ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. அதையும் உடனடியாக வழங்க வேண்டும். எங்களின் நீண்ட போராட்டத்துக்குப்பிறகு பத்து ஆண்டுகளாகப் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குப் பச்சை நிற அடையாள அட்டையும், ஓர் ஆண்டுகளாகப் பணியாற்றுபவர்களுக்குச் சிவப்பு நிற அடையாள அட்டையை அரசு கொடுத்துள்ளது.

மத்திய உணவுக் கழகத்தில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குத் தினமும் 503 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், எங்களுக்குச் சுமைதூக்கும் பொருள்களின் எடை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு டன் எடையுள்ள பொருள்களை இறக்குவதற்கு 25.84 ரூபாயும் ஏற்றுவதற்கு 48.15 ரூபாயும் ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. மாதத்தில் 15 நாள்களுக்கு மேல் வேலை இல்லாமல் நாங்கள் சிரமப்படுகிறோம். எனவே, எங்களைப் பணிநிரந்தரம் செய்வதுடன், மாதம் 15 ஆயிரம் ஊதிய வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதுகுறித்து நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸை கொடுத்துள்ளோம்" என்றார். 
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநரைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சுமைதூக்கும் தொழிலாளர்கள்  

நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் வட்டாரங்கள் கூறுகையில், “அரசின் உத்தரவின்பேரில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களைத் தவிர வேறுயாரும் இங்கு பணியாற்றமுடியாது. இதுவே அவர்களது வேலை உத்தரவாதமாகக் கருதப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என்றனர். 

ரேசன் பொருள்கள் சப்ளை பாதிக்கப்படும்?

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சுமைதூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தற்காலிகத் தொழிலாளர்கள் மூலம் பணிகளை மேற்கொண்டது. இதன்பிறகு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்துக்குச் சுமூகத்தீர்வை ஏற்படுத்தினர். தற்போது, வரும் 24ஆம் தேதி காலவரையற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர். திட்டமிட்டப்படி போராட்டம் நடந்தால் ரேசன் பொருள்கள், அம்மா உணவகம், அரசு விடுதிகளுக்கு உணவு பொருள்கள் சப்ளை பாதிக்கப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close