Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஹோட்டல்ன்னு சொல்லி டாஸ்மாக் திறந்துட்டாங்க" - மக்கள் வேதனை

டாஸ்மாக் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை

ழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும், பள்ளிகளுக்கு அருகிலும் மதுபானக்கடைகள் இருப்பது தவறு. 'மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலும், நெடுஞ்சாலைகளுக்கு அருகிலும் இருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் அகற்றவேண்டும்' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கிருந்த கடைகளை அகற்றி, அவற்றை குடியிருப்புகளுக்கு மத்தியிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் ஏற்படுத்தி, அந்தக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் மதுபான பாட்டில்களை உடைத்தும், கடைகள் முன் கோஷமிட்டும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் நாளுக்குநாள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில், சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் டாஸ்மாக் கடை ஒன்று புதிதாகத் திறக்கப்பட்டிருக்கிறது. அதைசெல்வி மூடக்கோரி அங்கு வசித்துவரும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். முக்கியமாக, அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், அந்தக் கடையை முற்றுகையிட்டனர். 

டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற செல்வி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். "இந்த ஏரியாவில் 20 நாள்களுக்கு முன்புதான் ஹோட்டல் திறக்கப்பட்டது. நாங்களும் ஹோட்டல் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால், அந்தக்கடையிலிருந்து மது பாட்டில்கள் விற்கிறார்கள் என்பது கடைதிறந்து நான்கு நாள்களுக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியவந்தது. அப்போதே நாங்கள் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம். ஆனால், அவர்கள் கடையை அகற்றியபாடில்லை. முதலில் ஹோட்டலுக்குப் பெயர்வைத்துப் பேனர்கள் வைத்தனர். இப்போது அதை அகற்றிவிட்டு, டாஸ்மாக் கடையாக மாற்றியுள்ளனர். இதையடுத்தே இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினோம். குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதால், வேலைக்கு போய்ட்டு வரும் பெண்கள் மற்றும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அந்தப் பகுதியைக் கடந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. போதிய அளவு மின்விளக்குகள் இல்லாமல், அந்த இடம் இருட்டாகக் காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும், கட்டுமானத் தொழிலுக்குச் சென்று வருபவர்கள். முன்பெல்லாம், வேலைக்குப் போய்ட்டுவரும் ஆண்கள் மதுகுடிக்க வேண்டும் என்றால், தூரத்தில் இருக்கும் கடைக்குச் சென்று குடித்துவிட்டு வருவார்கள். இப்போது கடை பக்கத்திலேயே இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குடிக்கிறார்கள். சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடிச்சே அழித்து விடுகிறார்கள். இதனால், பெண்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, இந்த டாஸ்மாக் கடையை இந்தப் பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமென்பதே எல்லா பெண்களின் கோரிக்கை. அதற்காகவே போராட்டம் நடத்தினோம். போராட்டம் நடந்தபோதே மடிப்பாக்கம் காவல்துறை துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் அந்தப் பகுதி தாசில்தார் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் வந்திருந்தார்கள். '10 நாள்களுக்குள் கடையை அகற்றிவிடுவோம்' என உறுதி அளித்துள்ளனர். அவர்கள் வாக்கு கொடுத்ததால், தற்காலிகமாகப் போராட்டத்தை நாங்கள் தள்ளிவைத்து, கலைந்து சென்றோம்" என்றார்.

போலீஸாருடன் பேச்சுவார்த்தை

மேலும், அவர்கள் 'எழுத்து மூலம் புகார் கொடுத்தால் கடையை விரைவில் அகற்ற முடியும்' என்று சொல்லியதால், அந்தப் பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து புகார் அளித்துள்ளார்கள். புகார் மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், இன்று (10.07.2017) கலால் துறைக்குப் புகாரை மாற்றியுள்ளார். விரைவில் அந்தப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று அந்தப் பகுதி மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

இந்தப் பகுதி தாசில்தாரைப்போலவே மற்ற பகுதிகளில் இருப்பவர்களும், போராட்டகாரர்களின் கோரிக்கையை ஏற்று செயல்பட்டால், அரசு அதிகாரிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இதேபோல், தமிழ்நாட்டில இருக்கும் எல்லா மதுபானக் கடைகளையும் அகற்றிவிட்டு, பூரண மதுவிலக்கை அமல்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close