Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எனக்குக் கார்டியனாக இருங்கள்'- கலெக்டருக்குத் திருநங்கை உருக்கமான கோரிக்கை

''கலெக்டரே தனக்குக் கார்டியனாக இருக்க வேண்டும்'' என்று திருநங்கை ஒருவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

'பாரதி கண்ணம்மா' என்ற பெயரில் மதுரையில் அறக்கட்டளை நடத்தி, திருநங்கைகள், பெண்கள், விளிம்புநிலை மக்களுக்காகச் சேவை செய்து வரும் பாரதி கண்ணம்மா என்ற 57 வயதான திருநங்கை, இன்று மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், '' கலெக்டர் தனக்குக் கார்டியனா இருக்க வேண்டும்'' என்ற கோரிக்கையை வைத்திருந்தார். ''ஏன் எதற்கு?'' என்று பாரதி கண்ணம்மாவிடம் பேசினோம்.

''எனது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். சகோதர, சகோதரிகள் யாரும் ஆதரவும் இல்லை. நான் தனியாக இருந்துதான் சமூகப்பணி ஆற்றி வருகிறேன். என்னுடைய செயல்பாட்டால் அனைவருக்கும் என்னைத் தெரியும். சட்டப்படிப்பு பயில வயது வரம்பை அரசு தற்போது நீக்கிவிட்டது. என்னுடைய சமுதாயப் பணிக்குச் சட்டப்படிப்பு அவசியமாக இருக்கிறது. நான் ஏற்கெனவே பி.ஏ. படித்துள்ளதால் எல்.எல்.பி. மூன்றாண்டு கோர்ஸில் சேர விண்ணப்பித்துள்ளேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று 2014-ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் எனக்கு இதில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது என்ன சிக்கல் என்றால், விண்ணப்ப படிவத்தில் 14 , 15 வது அட்டவணையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர், அவர்களின் தொழில், வருமானம் கேட்கப்பட்டுள்ளது. பெற்றோர், பாதுகாவலர் இல்லாதவர்கள் என்று எந்த அட்டவணையும் கொடுக்கப்படவில்லை.

எனக்குப் பெற்றோர், பாதுகாவலர் இல்லாததால் அந்த அட்டவணையை வெற்றிடமாகக் காட்ட வேண்டிய நிலை. அப்படிப் பூர்த்தி செய்த என்னுடைய அப்ளிகேஷனை கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. திருநங்கைகளுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கியும் என் போன்ற பெற்றோர், பாதுகாவலர் இல்லாத திருநங்கைகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்த வகையில் மாவட்ட அளவில் கலெக்டருக்கு அந்தப் பொறுப்பு உண்டு. என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படாத வகையில் மாவட்ட ஆட்சியரே எனக்குப் பாதுகாவலராக இருந்து உதவும்படி அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்'' என்றார்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டப்போது, இதற்கு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை. சட்டப் படிப்பு விண்ணப்பத்தில் ஆதரவற்றோருக்கு என்று தனியாக ஒரு காலம் ஒதுக்கியிருந்தால் இந்தப் பிரச்னை வராமல் இருந்திருக்கும்'' என்கிறார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close