Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பியூஸ் கோயலின் பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானது!

பியூஷ் கோயல்

ணு உலைகளை வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடையாது என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஸ் கோயலின் பேச்சு, அடிப்படை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று 'பூவுலகின் நண்பர்கள்' கண்டனம் தெரிவித்துள்ளது.
 
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வாழும் பகுதிகளில் எந்த மாதிரியான திட்டங்கள் வரலாம் அல்லது வரக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. ரசாயன தொழிற்சாலை முதல் அணு மின் நிலையங்கள் வரை மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெறுவதன் அடிப்படை நோக்கமே, அந்தத் திட்டம் பற்றி மக்களின் கருத்துகளைக் கேட்டறிவதுதான். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமை இது. மத்திய எரிசக்தித் துறை அமைச்சரின் மக்கள் விரோதப் பேச்சு இதற்கு எதிரான, யதேச்சதிகார அரசியல் பேச்சாகும், 
 
உலகத்தில் அணு சக்தியை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு, பிரான்ஸ், அந்த நாடு தற்போது அணுசக்தியிலிருந்து 75% மின்னுற்பத்தி செய்கிறது, அதை வரும் 2025-ம் ஆண்டுக்குள் 50% ஆக குறைத்து, வரக்கூடிய ஆண்டுகளில் மேலும் குறைக்கப்போவதாக முடிவுசெய்திருக்கிறது. தன்னுடைய மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை அணு சக்தியை நம்பியிருக்கும் தென் கொரியா, அணு சக்தி பயன்பாட்டிலிருந்து முழுவதும் வெளியேறப் போவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும், தன்னுடைய அணுசக்தி பயன்பாட்டை
19 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாகக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

உலகம் முழுவதும் அணுசக்திக்கு எதிரான மன நிலையிலிருக்கும்போது, இந்தியாவின் எரிசக்தித்துறை அமைச்சர் பேசியிருப்பது அவருடைய பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. குஜராத் மாநிலத்திலுள்ள பாவ் நகர் மாவட்டம், மிதிவிர்தியில் அமையவிருந்த அணு உலைகளை, மக்கள் போராட்டங்கள் காரணமாக விலக்கிக்கொண்டு ஆந்திர மாநிலத்துக்கு மாற்றியிருக்கிறது மத்திய அரசு. அப்படி என்றால் இனிமேல் குஜராத் மாநிலத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கொடுக்காமல் இருக்க மத்திய அரசு முடிவு செய்யுமா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கங்களில் கூடங்குளம் கழிவுகள் கொட்டப்படும் என்று அறிவித்தபோது, மொத்த கர்நாடக மாநிலமும் போராட்டத்தில் இறங்கியது. போராட்டம் இரண்டு நாள்கள் நடைபெற்றவுடன் அன்றைய மாநில முதல்வர் ’ஷெட்டர்’ கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் அணுக்கழிவுகளைக் கொட்டவிட மாட்டோம் என்று அறிவித்தார். மத்திய அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் கர்நாடக மாநிலத்துக்கு கூடங்குளம் மின்சாரம் போகக் கூடாது, ஆனால், சுமார் 442 MW மின்சாரம் கர்நாடகாவுக்குச் செல்கிறது.
மத்திய அமைச்சரின் இந்தப் பொறுப்பற்ற பேச்சை விலக்கிக்கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close