Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அந்தோணியார் கடல் பவனி

கச்சத்தீவில் தமிழக மீனவர்களால் உருவாக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத்தின் நினைவாக ராமேஸ்வரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடற்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அந்தோணியார் கடல் பவனி சிறப்பாக நடந்தது.

கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்தபோது கடலுக்கு மீன் பிடிக்க மற்றும் சங்கு எடுக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வு எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்திலிருந்து மீனவர்களைக் காப்பாற்றியதன் நினைவாக கச்சத்தீவில் புனித அந்தோணியாருக்கு ஓலைக் குடிசையால் ஆலயம் அமைக்கப்பட்டது. நாளடைவில் அங்கு கோயில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. இதில் இந்தியா இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வந்தனர். 1974-ல் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுத்த பின்னரும் இங்கு திருவிழா நடத்தப்பட்டு வந்தது. 83-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் கச்சத்தீவு திருவிழா தடைபட்டது.

இதனால், கச்சத்தீவு செல்ல முடியாத ராமேஸ்வரம் மீனவர்கள், ராமேஸ்வரம் வேர்க்கோடு கடற்கரைப் பகுதியில் கச்சத்தீவு புனித அந்தோணியார் நினைவாக தனி ஆலயம் அமைத்து ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. திருவிழாவில் தேர்ப் பவனி நடப்பதுபோல் இங்கு கடல் பவனி நடத்துவது வழக்கம். அந்தோணியார் சிலையை வைத்து கடலில் பவனி வரும் படகுக்கு அந்த ஆண்டு முழுவதும் நிறைய மீன்கள் கிடைக்கும் என மீனவர்களிடையே நம்பிக்கை உள்ளது. இதனால் அந்தோணியார் சிலையைப் படகில் எடுத்து செல்ல அதிக போட்டி நிலவும். இதைத் தவிர்க்க சீட்டு குலுக்கல் நடத்தி படகைத் தேர்வு செய்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு இரும்புக்கடை அந்தோணி என்பவரது படகு தேர்வு செய்யப்பட்டது. நேற்று இரவு திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்தோணியாரின் சுருவத்தை (சிலை) அலங்கரிக்கப்பட்ட படகில் ஏற்றி வாண வேடிக்கைகளுடன் கடலில் பவனி வந்தனர். அதைத் தொடர்ந்து கடற்கரை வீதிகளில் தேர்ப் பவனியும் நடந்தது. திருவிழா மற்றும் தேர்ப்பவனியில் அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று அந்தோணியாரை வழிபட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close