Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெரினாவில் திருடுபோன உலகம் சுற்றிய நாய்! கதறித் துடிக்கும் ஜெர்மன் தம்பதி

உயிரைக் காப்பாற்றிய நாய், சென்னை மெரினாவில் திருட்டுப்போனதால் ஜெர்மனி தம்பதியர் வேதனையடைந்துள்ளதோடு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் (steffan Kaggrah), தன் மனைவியுடன் உலகச் சுற்றுப் பயணத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர். அப்போது அவர்கள், தனது வீட்டின் அருகே இருந்த நாயை தம்முடன் அழைத்துச்சென்றனர். அந்த நாய்க்கு 'லூக்' என்று பெயர் வைத்தனர். அந்தத் தம்பதியர், ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப்பார்த்தபோது, அங்குள்ள பனிப்பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, விஷப்பாம்பு ஒன்று தம்பதியரைக் கொத்த முயன்றுள்ளது. அதைப் பார்த்த லூக், உடனே அந்தத் தம்பதியரைக் காப்பாற்றியுள்ளது. இதேபோல பனிப்புயல் ஏற்பட்டபோது, தம்பதியர் தனியாகப் பிரிந்து சென்றனர். அப்போது, இருவரையும் லூக் சேர்த்து வைத்துள்ளது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிய 'லூக்'குடன் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு தம்பதியர் ஆசியாவுக்கு வந்துள்ளனர். இரண்டு வாரத்துக்கு முன்பு இந்தியா வந்த தம்பதியர், கடந்த சனிக்கிழமை சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் மெரினாவுக்குச்  சென்றுள்ளனர். லூக்கை, அங்கிருந்த காரின் வெளிப்பக்கம் கட்டிவைத்துவிட்டு தம்பதியர் காருக்குள் இருந்துள்ளனர். பின்னர், காரிலிருந்து கீழே இறங்கிய தம்பதியர், லூக் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மெரினா காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், லூக்கை ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்துச் சென்றதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லூக்கைத் தேடி வருகின்றனர்.

லூக் இல்லாமல் இந்தத் தம்பதியர் தற்போது இலங்கை சென்றுவிட்டனர். 'சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் லூக்குக்காக இந்தியா வருவோம்' என்றும் தெரிவித்துள்ளனர். அந்த ஜெர்மன் தம்பதியர், சமூக வலைதளத்தில் ஓர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், "எங்கள் உயிரைக் காப்பாற்றிய லூக்கைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close