Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரண்பேடிக்கு கிரிமினல் தண்டனை - நாராயணசாமியின் பாராளுமன்ற செயலர் 'பகீர்' தகவல்

''மூன்று நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு சாதகமாக வரும் என்பதால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் உள்துறை அமைச்சகமும் இணைந்து கோப்புகளைத் திருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்'' என்று முதல்வர் நாராயணசாமியின் பாராளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையில்லாமல், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளித் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமன எம்.எல்.ஏ-க்களாக அறிவித்தது. அறிவிக்கப்பட்ட அன்றே ராஜ்நிவாஸில் அவர்களுக்கு ரகசியமாகப் பதவிப் பிரமாணத்தைச் செய்துவைத்தார் கிரண்பேடி. இந்த விவகாரம் அவருக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்டவர்கள் மூன்று பேருக்கும் இடம் ஒதுக்கித் தரும்படி ஆளுநர் மாளிகையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ-க்கள் நியமனத்தை ஏற்க முடியாது என்று கூறி அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினார் சபாநாயகர் வைத்திலிங்கம். அதனால் எம்.எல்.ஏ-க்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிரண்பேடி தெரிவித்தார். “மத்திய அரசு புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ-க்ளாக நியமித்துள்ளது. அந்தச் செய்தியைத் தலைமைச் செயலாளரும் அரசிதழில் வெளியிட்டார். அதையடுத்து மத்திய அரசு நியமித்த 3 பேரும் சபாநாயகரை சந்தித்து தங்களுக்கு பதவிப் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு தெரிவித்தனர். ஆனால், சபாநாயகர் நேரம் மற்றும் தேதியைத் தெரிவிக்கவில்லை. அதையடுத்து அந்த மூன்று பேரும் எழுத்துபூர்வ புகாரை என்னிடம் தந்தனர்.

 

யூனியன் பிரதேச நிர்வாகி என்ற முறையில் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தேன். ஆனால், நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் பேரவைத் தலைவர் அலுவலகம் இன்று திருப்பி அனுப்பி உள்ளது. அதுகுறித்த சரியான தகவல் தரவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்” என்று தெரிவித்துவிட்டு குடியரசுத் தலைவரிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் தெரிவிக்க திடீரென்று நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து சர்ச்சைக்குறிய நியமன எம்.எல்.ஏ விவகாரத்தில் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் மற்றும் விதிகள் குறித்து லோக்சபா செயலரிடம் ஆலோசனை நடத்த சபாநாயகர் வைத்திலிங்கமும் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். மாநில துணைநிலை ஆளுநரும் சபாநாயகரும் ஒரே நேரத்தில் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், “துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கை, தேசம் முழுவதும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன். பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாஜகவின் முதல்நிலை சேவகர் என்பதைப்போல நடந்துகொண்டு இருக்கின்றார். மூன்று நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள கிரண்பேடி உள்துறை அமைச்சகத்தில் பல்வேறு கோப்புகளைத் திருத்தி வருகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்திருக்கின்றது. நியமன எம்.எல்.ஏ-க்களை தான் பரிந்துரை செய்யவில்லை என கிரண்பேடி கூறியுள்ளார். ஆனால், உயர் நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் டெல்லி சென்று கோப்புகளைத் திருத்தி வருகிறார். இந்த வழக்கின் தீர்ப்பு புதுச்சேரி அரசுக்குச் சாதகமாக வரும் என்பதால், கிரண்பேடியும் உள்துறை அமைச்சகமும் இணைந்து கோப்புகளைத் திருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்படி கோப்புகளைத் திருத்தினால் அவர்களுக்கு கிரிமினல் தண்டனையை வாங்கித் தருவோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close