Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“கதிராமங்கலத்துக் குடிநீர் குடிக்கத் தகுதியற்றது!” அச்சம் தரும் ஆய்வு முடிவு

கதிராமங்கலம்

.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராட்டக் குரல் எழுப்பிவரும், கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் குடிக்கத் தகுதியற்றதாக மாறியிருக்கிறது என்றதொரு அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கதிராமங்கலத்து நிலத்தடி நீரை ஆய்வு மையத்தில் கொடுத்து ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டு இருக்கிறது நாம் தமிழர் கட்சி. அந்த ஆய்வின் முடிவில், 'சாதாரணமாகத் தண்ணீரில் லிட்டருக்கு 500 மில்லி கிராம் வரை திடப்பொருள் அளவு இருக்கும். ஆனால், கதிராமங்கலம் கிராமத்தின் நிலத்தடி நீரில் 1,445 மில்லி கிராமுக்கும் மேல் திடப் பொருள் இருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், டர்பிடிட்டி (Turbidity - கலங்கல் தன்மை) அளவும் சராசரியை விட 50 மடங்கு அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கதிராமங்கலம் நிலத்தடி நீர் ஆய்வுமேலும், அந்த அறிக்கையில், 'சாதாரண நிலத்தடி நீரின் நிறம் 5 Hazen வரை இருக்கும். ஆனால், கதிராமங்கலத்து நீரின் Hazen 8 -ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சாதாரண தண்ணீரில் பிராணவாயு அளவு 5.9 மி.கிராம்/லிட்டர் என்ற அளவில் இருக்கும். ஆனால், இந்தப் பகுதி நிலத்தடி நீரில் 1.2 மி.கிராம்/லிட்டர் என்ற அளவிலேயே இருக்கிறது. இது கழிவு நீரில் காணப்படும் அளவு' என்று விளக்குகிறது.

இதுபோல, அந்தப் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெயின் அளவும் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது இந்த அறிக்கை. சாதாரண நிலத்தடி நீரில் எண்ணெய்  அளவு 0.5மி.கிராம் /லிட்டர் என்ற அளவில் இருக்கும். கதிராமங்கலத்தில் இது 1.75  மி.கிராம்/லிட்டர் என்ற அளவில் இருக்கிறது. 

'உயிரியல் பிராணவாயுத் தேவை மற்றும் வேதியியல் பிராண வாயுத் தேவையைக் கணக்கிட்டதில், இந்தப் பகுதி நிலத்தடி நீர்  அதிக வலிமையுடையக் கழிவு நீராக இருக்கிறது. இதனைச் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தம் செய்துதான் அருந்த வேண்டும்' என்கிறது இந்த ஆய்வு அறிக்கை.

குறிப்பாக இந்தப் பகுதி நிலத்தடி நீரில் உள்ள ஹைட்ரஜன் அயன் அளவு அபாய அளவை எட்ட இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சாதாரண குடிநீரில் 6.5 - 8.5 அளவில் pH (ஹைட்ரஜன் அயன் அளவு) இருக்கும். கதிராமங்கலம் நிலத்தடி நீரில் இது 8 pH என்ற அளவில் இருக்கிறது. இது பயன்படுத்தக் கூடிய அளவுதான் என்றாலும் விரைவில் இது 9 - 10 pH ஆக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

நிலத்தடி நீரில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று  ஓ.என்.ஜி.சி கூறிவந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஆய்வு முடிவு, போராட்டக்களத்தில் நிற்கும் மக்களுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. இந்த ஆய்வு முடிவு குறித்து நம்மிடம் பேசிய கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள், “இந்தத் தண்ணீரைத்தான் நாங்கள் பல ஆண்டுகளாகக் குடித்து வருகிறோம். எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகளுக்காவது நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் போராடி வருகிறோம். இந்தச் சூழலில் மக்களின் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு, ஓ, என். ஜி.சி க்கு ஆதரவாக செயல்படுகிறது. எங்கள் மீது வன்முறையை ஏவுகிறது; போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்துகிறது. ஆய்வு முடிவு தெரியவந்துவிட்ட இப்போதாவது எங்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும்” என்றார்  சோகமான குரலில்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close