Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணி, அணிக்குள் அணி, அதற்குள் இன்னொரு அணி..! அதகளப்படும் அ.தி.மு.க.

திவாகரன் ஒருங்கிணைத்த நூற்றாண்டு விழா

சிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியில் திவாகரனுக்கும், தினகரனுக்கும் ஏழாம்பொருத்தமாகிவருவது சிறையில் இருக்கும் சசிகலாவை வேதனைப்படுத்திவருவதாகச் சொல்கிறார்கள் மன்னார்குடி அதிமுகவினர். ஒருவர் ஏற்பாடு செய்யும் கூட்டத்தை மற்றவர் தடுத்துநிறுத்தும் அளவு இரு தரப்புக்கும் மோதல் முற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஆட்சிக்கனவு கலைந்து சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் சசிகலாவுக்கு இது மேலும் வேதனையைத் தந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.  

ஜெயலலிதாவின் தோழியாகப் பலம்பொருந்தியவராக இருந்த சசிகலா, அதிமுக கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், ஜெயலலிதா மரணத்திற்குப்பின் சசிகலா தரப்பினருக்குச் சோதனையான காலகட்டம் இது. அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் பிரிந்துசென்று குடைச்சல் தந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் எடப்பாடி - தினகரன் தரப்பு இரு அணிகளாக முட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சசிகலா குடும்பத்திற்குள்ளேயே தினகரன் - திவாகரன்  அணி என இப்போது இரு அணிகள் உருவாகி முட்டல் மோதல் அதிகமாகிவிட்டது. தங்கள் அதிகாரத்தைக் காட்ட மன்னார்குடியில் இருவரும் பகிரங்கப்பிரயத்தனம் செய்துவருகிறார்கள். 

கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி தினகரன் அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் மன்னார்குடியில், பிரம்மாண்ட கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  திவாகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல், மிரட்டல் விடுக்க கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அம்மாவின் கனவு, சின்னம்மாவின் லட்சியம் என ஃபிளக்ஸ்கள் பளபளக்க மன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வரும் 15ம் தேதி நடத்த திவாகரன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு தீவிரமாகப் பணியாற்றி வந்தார்கள்.

திவாகரன் ஒருங்கிணைத்த நூற்றாண்டு விழா

திவாகரனின் முதல் அரசியல் மேடை என்பதால், அவர் என்ன பேசப்போகிறார், அவரது அரசியல் மூவ் என்ன என்பது பற்றி அறிய பெரும் எதிர்பார்ப்புடன் அவருடைய ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இருதினங்களுக்கு முன் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளன என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 

கூட்டத்தை நடத்தவிடாமல் செய்ததில் தினகரன் ஆதரவாளர்கள் பின்னணி இருப்பதாகச் சொல்லும் அவர்கள், திவாகரன் பற்றித் தவறான தகவல்களைச் சொன்னதால்தான் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் கூட்டம் தேவையில்லை என சிறையில் இருந்தபடியே கறாராக சொல்லிவிட்டாராம் சசிகலா. அதற்குப்பிறகுதான் திவாகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துவதில் பின்வாங்கியிருக்கிறார்கள். கடந்த வாரம் சசிகலாவை தினகரனும், திவாகரனும் சந்திப்பதாக இருந்தது. ஆனால், தினகரன் மட்டும் சசிகலாவை சந்தித்துத் திரும்பினார். ஆனால், திவாகரன் பெங்களூரு செல்ல முடியவில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளைப் பார்த்து வந்தார். கூட்டத்தை முடித்துவிட்டு சசிகலாவைச் சந்திக்க இருந்ததாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவதை சிலர் விரும்பவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 

கடந்த ஜூன் 11ம் தேதி தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்த இருந்த நிலையில் அது ரத்தானது. திவாகரன் ஆதரவாளர்கள் மிரட்டல் விடப்பட்டதால்தான் கூட்டம் கடைசிநேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திவாகரன் வளர்ச்சியை விரும்பாத தினகரன் இப்படிக் கூட்டத்தை ரத்து செய்யவைத்ததாகப் புலம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை செய்து கூட்டத்தை இப்போது நடத்த வேண்டாம். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் கூட்டத்தை ரத்து செய்வதாக திவாகரன் அறிவித்திருப்பதாக ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள். 

வேறு சிலர், கூட்டம் மன்னார்குடி நகரம் சார்பில்தான் நடத்த திட்டமிட்டிருந்தார்கள். மாவட்ட கழகம் சார்பில் அல்ல, லோக்கல் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ், தன்னுடைய விருப்பம் இல்லாமல் திவாகரனை வைத்து அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடத்துவதை விரும்பவில்லையாம். அவரிடம் அனுமதி பெறாமலே கூட்டத்திற்கான ஏற்பாடுகளைத் திவாகரன் ஆதரவாளர்கள் செய்து வந்தார்கள். திவாகரனும் அதற்குச் சம்மதித்து இருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருவதாகவும் திவாகரன் ஆதரவாளர்கள் பேசி வந்தார்கள். இதெல்லாம் லோக்கல் அமைச்சர் ஆர்.காமராஜை பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் ஆர்.காமராஜ்  இருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால், திவாகரன் ஆதரவாளர்களோ, ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் திவாகரன், கூட்டத்தைப் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டுவார் என்கிறார்கள். 

அதிமுகவில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close