Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளியில் தேர்தல்... மாணவர்களே அமைச்சர்கள்! மரக்கன்று தரும் ஆசிரிய நண்பர் #CelebrateGovtSchools

மாணவர்களுடன் ஆசிரியர் வெங்கடேஷ்

“படிப்பைத் தாண்டி சமூக விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், தனக்கான உரிமைகளைப் கேட்டுப் பெற முடியும். அதனால்தான் மாணவர்களுக்கு அரசியலமைப்பு, தேர்தல், நிர்வாகச் செயல்பாடுகளைச் செயல்முறையாக செய்யும் முயற்சியை எங்கள் பள்ளியில் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்..." - உற்சாகமாகப் பேசுகிறார் ஆசிரியர் வெங்கடேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உமையாள் பரணச்சேரி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர். பாடம் நடத்துவதைத் தாண்டி, மாணவர்களுக்கு அரசியல் நிர்வாகப் பயிற்சி, காலை உணவு வழங்குதல், ‘சிறு துளி' அமைப்பின் மூலம் மற்ற பள்ளிகளுக்கு உதவுதல் என ஏராளமான செயல்பாடுகளைச் செய்து மாணவர்களின் திறனை வளர்க்கும் முயற்சியைச் செய்து வருகிறார். மாணவர்களுடன் நண்பர்போல பழகும் இவரை மாணவ - மாணவிகள் சூழ்ந்துகொள்கிறார்கள். 

அரசுப் பள்ளியில் தேர்தல் முறை

“தனியார் பள்ளியில் வேலை செய்துவந்த நான் கடந்த 2011-ம் வருஷம்தான் அரசுப் பள்ளிக்கு வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டு இந்தப் பள்ளியில் சேர்ந்தேன். கிராமப்புறப் பகுதியில்வாக்களிக்கும்  மாணவி வசிக்கும் மாணவர்களிடம் உரையாடும்போது, பல அடிப்படை சமூக விஷயங்கள்கூட தெரியாத நிலையில் இருப்பதை உணர முடிந்தது. அதனால் தினமும் செய்திகளைப் பார்த்தும், செய்தித்தாள்களைப் படித்தும் வரச்சொல்லி அவர்களிடம் கேள்வி கேட்டு பல சமூக விஷயங்களையும் சொல்லிக்கொடுப்பேன். இதற்கிடையே பள்ளியில் அரசியல் நிர்வாகத்தை செயல்வழிக் கல்வியாக கொண்டுவர வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக இருந்தும், இந்த ஆண்டுதான் அது நிறைவேறியிருக்கிறது.

கல்வி, நல்ல சுற்றுசூழல், குடிநீர், சுகாதாரம், சத்துணவு உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகளை மாணவர்கள் சிறப்பாகப் பெறவும் அவற்றைப் பெறுவதில் சிக்கல் இருப்பின் அதனை பள்ளி நிர்வாகத்திடம் அவர்கள் தைரியமாக கேட்டுப் பெறும் சூழ்நிலையை ஏற்படுத்தவும் முடிவெடுத்தேன். அதன்படி ஒவ்வொரு துறைக்கும் மாணவர்களையே அமைச்சர்களாக நியமித்து, வேட்பு மனுத்தாக்கல், தனிச் சின்னங்கள் ஒதுக்குதல், பிரசாரம் செய்தல், வாக்குப்பதிவு, முடிவுகள் அறிவித்தல் என நிஜ தேர்தல் போலவே செய்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் வாரம் ஒருமுறை அனைத்து மாணவர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டு அதனை தீர்க்கும் முறைகளைச் சிறப்பாக செய்துவருகிறார்கள். முன்பு பயத்துடனும் தயக்கத்துடனும் இருந்த மாணவர்கள், தற்போது தங்கள் தேவைகளுக்கு தைரியமாக குரல் கொடுக்கிறார்கள். அதைவிட மாணவர்கள் நாளை பெரியவர்களானதும், பொது தேவைக்கும், தவறு செய்யும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்” என பூரிப்பவர், தான் செய்துவரும் மற்ற செயல்பாடுகளைப் பற்றியும் பேசுகிறார்...

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கும் ஆசிரியர்

“அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் இருப்பதால் படிக்கத் தேவையான உபகரணங்கள்கூட அவர்களால் வாங்க முடிவதில்லை. அதனால், இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தொடங்கி எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் பலரிடமும் அவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகம், உபகரணம் போன்றவற்றை பெற்று நான் பணிபுரியும் பள்ளி மாணவர்களுக்கு தருகிறேன். பல முன்னாள் மாணவர்கள் காலை உணவை ஸ்பான்சர் செய்கிறார்கள். இம்முயற்சியைக் கடந்த ஆண்டு 'சிறுதுளி' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலமாக செயல்படுத்திவருகிறோம். 

கிராமப்புறப் பகுதியிலுள்ள எங்கள் பள்ளி மாணவர்கள் பலரும் தினமும் காலை உணவைச் சாப்பிடாத நிலையிலேயே பள்ளிக்கு வருகிறார்கள். சாப்பிட்டுவிட்டு வரும் மாணவர்களும் தினமும் ஒரேவிதமான உணவையேச் சாப்பிடும் சூழல்தான் இருக்கிறது. ஆரோக்கியமான, அதேசமயம் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைக் கொடுத்தால் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள். அதன்மூலம் நல்ல உடல்நலத்துடன் படிப்பார்கள் என்பதால், பெங்களூரில் உள்ள 'சத்தியசாய் அறக்கட்டளை'யின் உதவிபெற்று பல மாதங்களாக எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் காலை உணவைத் தயார் செய்து கொடுக்கிறோம். இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுக்கவே, தற்போது 30-க்கும் அதிகமான பள்ளிகளிலும் காலை உணவு கிடைக்க வழிசெய்திருக்கிறேன்" என்கிறார் உற்சாகமாக.

"கிராமத்துக் குழந்தைகள் நெடுந்தொலைவில் இருந்து பள்ளிக்கு வருவதற்கு உதவவும், இடைநிற்றலைத் தடுக்கவும் தன்னார்வலர்களின் உதவியுடன் முதல்கட்டமாக எங்கள் பள்ளியின் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அடுத்து 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவிகளுக்கும், தொடர்ந்து மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும், மாணவர்களின் பிறந்த நாளின்போது அவர்களுக்கு காலைப் பள்ளி வழிபாட்டு நிகழ்வில் மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்து உற்சாகப்படுத்துவோம். இதனால் பரிசாகக் கிடைத்த மரக்கன்றை நட்டுப் பராமரிப்பதுடன், தன் பிறந்த நாளில் நட்ட மரம் நன்றாக வளர வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படும்.

மாணவர்களுடன் ஆசிரியர் வெங்கடேஷ்

தவிர, பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களை வாரம் ஒரு புத்தகம் என்ற முறையில் ஒவ்வொரு மாணவருக்கும் படிக்க வழங்குவோம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளிச் சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில் நடைபெறும் திறன் வெளிப்படுத்தும் நிகழ்வில், தான் படித்த நூலைப் பற்றிய தகவல்களை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த களம் அமைத்துக்கொடுக்கிறோம். மேலும், பள்ளியில் 'நம்ம நூலகம்' என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களிடம் அவர்கள் படித்த கல்லூரிப் புத்தகங்களை சேகரித்து வருகிறோம். கிடைக்கும் நூல்களை ஏழ்மை நிலையிலுள்ள கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவோம்” என வெங்கடேஷ் சொன்னபோது, 'அந்த கிஃப்ட் பாக்ஸ் விஷயத்தை மறந்துட்டீங்க சார்' என நினைவுப்படுத்துகிறார்கள் மாணவர்கள்.
'தேங்க்ஸ் செல்லங்களா' என்றவர், "படிப்பிலும் மற்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியிலும் திறனை வெளிப்படுத்தும் மாணவ - மாணவிகளைப் பற்றிய செய்தி கிடைத்தால், அவர்கள் எந்த மாவட்டத்தில் படித்தாலும் பணமாகவோ அல்லது அவர்களுக்கான தேவைகளை கிஃப்ட் பாக்ஸ் வாயிலாக பரிசாக அனுப்பியோ உற்சாகப்படுத்திவருகிறோம்" என்கிறார். இவர், இரண்டு அரசுப் பள்ளிகளையும், சமீபத்தில் தன் திருமண நாளின்போது ஓர் ஏழை மாணவனையும் தத்தெடுத்திருக்கிறார்.

“ஆசிரியர் என்ற நிலையைத் தாண்டி, மாணவர்களிடம் நல்ல நண்பனாக இருக்கவே விருப்பப்படுகிறேன். அந்த எண்ணத்தில் என்னாலான செயல்பாடுகளை செய்துவருகிறேன்" என பெருந்தன்மையோடு மாணவர்களை கட்டித்தழுவி சிரிக்கிறார், வெங்கடேஷ்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close