Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘முதல்வரை ஏமாற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்’ - மணல் குவாரிகளில் நடக்கும் தில்லுமுல்லு #VikatanExclusive

மணல் குவாரிகளில் கமிஷன் பெற்றுக்கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் லாரிகளில் முறைகேடாக மணல் ஏற்றுவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராஜாமணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 மணல் குவாரி

'மணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இல்லை' என்ற வாசகத்தோடு கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு மணல் இணையச் சேவையைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம் இணையதளம் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' மூலம் மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தால் மணல் சேவையில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வழக்கறிஞர் செல்ல.ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், பொதுப்பணித்துறை செயலாளரிடம் இன்று மனு கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். "தமிழகத்தில்
23 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க லாரிகளுக்கு மணல் முறையாக வழங்கப்படுவதில்லை. உள்ளூர் லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தினமும் லோடு வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி வரிசைப்படி மணல் வழங்க வேண்டும். மேலும், அரசு உத்தரவுபடி வரைவோலை பெற்றுக்கொண்டு மணல் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை முறையில் 'ஸ்வைப் மெஷின்' மூலம் டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு பயன்படுத்தி மணல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. கடந்த 1.7.2017 முதல் அரசு மணல் குவாரிகளில் ஆன்லைன் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைனில் பதிவு செய்த லாரிகள்கூட 20 நாள்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டியதுள்ளது.

பொதுப்பணித்துறை அலுவலர்கள் லாரி உரிமையாளர்களிடம் ஒரு லோடுக்கு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு முன்பதிவில் முறைகேடு செய்கின்றனர். மேலும், ஆன்லைன் பதிவில் பணம் செலுத்தாமல் முன்பதிவு மட்டுமே செய்வதால் தேசிய பர்மிட் பெற்ற லாரிகள் மூலம் முறைகேடு செய்யப்படுகிறது. இது, வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்த வழிவகுக்கிறது. முழுநேரம் மணல் தொழிலில் ஈடுபடுவதோடு மணல் எடுப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட மணல் லாரி சங்கங்களைச் சேர்ந்த லாரிகள் வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாததால் ஆன்லைன் முன்பதிவு செய்தாலும் நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டியதுள்ளது. இதனால் டிரைவர்களுக்கு காத்திருப்புப்படி வழங்க வேண்டியதுள்ளது.

வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தலைத் தவிர்க்கும் மணல் லாரி சங்கங்களில் பதிவு பெற்று தமிழகத்தில் மட்டும் இயக்கப்படும் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை மட்டுமே ஆன்லைனின் முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். பொதுப் பணித்துறையினரைத் தவிர்த்து ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் கமிஷன் பெற்றுக் கொண்டு மணல் அள்ள முன்னுரிமை டோக்கன் வழங்குகின்றனர். எனவே முறைகேடுகளில் ஈடுபடும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன் லைனில் முன்பதிவு செய்த லாரிகளுக்கு மட்டுமே வரிசைப்படி மணல் லோடு வழங்க வேண்டும்’’ என்றார்.  

தமிழ்நாடு மணல் இணையச் சேவை

இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "மணலை அரசே ஏற்று நடத்தினாலும் தனியார் மூலம்தான் மணல் விநியோகிக்கப்பட்டுவந்தது. மணல் தொழிலில் கொடிகட்டிப்பறந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கைது நடவடிக்கைக்குப் பிறகு, மணல் மூலம் கிடைக்கக்கூடிய முழு வருமானமும் அரசுக்கே கிடைக்க இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே அரசுக்கு முழுமையான வருமானம் கிடைக்கும்.

அதாவது, முன்பதிவு செய்யும்போதே அதற்குரிய பணத்தையும் ஆன்லைனில் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மணல் குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க வேண்டும். மேலும், குவாரிகளுக்குள் அனுமதிக்கப்படும் லாரிகளுக்கு சிறப்பு பாஸ் வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே மணல் விற்பனையில் முறைகேடுகளைத் தவிர்க்க முடியும்" என்றன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை செல்போனில் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. 

தமிழ்நாடு மணல் இணையச் சேவை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள பொதுப்பணித்துறையிலேயே முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு எழுந்துள்ளது. அதற்கு உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மணல் லாரி உரிமையாளர்கள். குறைந்த விலைக்கு மணல் கிடைக்கவே அரசு, இந்தத் திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், முறைகேடு காரணமாக மணல் விலை குறையவில்லை. 

இப்படியும் ஒரு மோசடி

மணல் அள்ள ஆறு சக்கரங்கள் கொண்ட லாரி, பத்து சக்கரங்கள் கொண்ட 'டாரக்ஸ்' வாகனம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் மணல் அள்ளப்படுவதால் 12 சக்கர வாகனங்கள் கொண்ட வாகன பதிவு நம்பரில் முன்பதிவு செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த நம்பர் பிளேட்டை பத்து சக்கர வாகனமான டாரக்ஸில் மாற்றி மணல் எடுத்துச் செல்ல சிலர் பயன்படுத்துகின்றனர். முன்பதிவு செய்யும்போதும், மணல் அள்ள வரும் வாகனங்களை கண்காணித்தாலே இந்த முறைகேட்டைத் தடுக்க முடியும்.

 மணல் குவாரி

 மீண்டும் லிப்டிங் ஒப்பந்தம் 

 கடந்த முறை அரசே மணல் குவாரிகளை நடத்தினாலும் மணல் அள்ளும் பணி கான்ட்ராக்டாகக் கொடுக்கப்பட்டது. மேலும், செகண்ட் சேல்ஸ் மூலம்தான் மணல் விற்கப்பட்டது. இதனால்தான் சேகர்ரெட்டி போன்றவர்கள் மணல் பிசினஸில் கால்பதிக்க முடிந்தது. தற்போது, அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினரே மணல் அள்ளும் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களை லீஸிக்கு எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சில குவாரிகளில் மணல் அள்ளும் பணி மீண்டும் ஒப்பந்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது, மணல் விற்பனை மீண்டும் தனியாருக்குச் செல்ல வழிவகுக்கும்.  

 குறையாத மணல் விலை 

தமிழகத்துக்கு தினமும் 30 ஆயிரம் லோடு மணல் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 5,000 லோடு மணல் மட்டுமே கிடைத்துவருகிறது. இதனால், 10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஒரு லோடு மணல் 25 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. மேலும் ஆறு சக்கர வாகனத்துக்கு இரண்டு யூனிட் மணலும், பத்து சக்கர வாகனத்துக்கு மூன்று யூனிட் மணலும் ஏற்றப்படும். அதிலும் முறைகேடு நடப்பதாகச் சொல்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close