Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

86 வயதில் திருக்குறள் பரப்புரை செய்யும் 'திருக்குறள் தாத்தா'!

திருக்குறள் பரப்புரை

திருவள்ளுவர் தினத்தை, நாம் சாதாரணமாகக் கடந்துவிடுகிறோம்.  திருக்குறள் என்றாலே  மாணவர்கள் மனப்பாடப் பகுதியாகவும், பேருந்துகளில் எழுதி இருக்கும் திருக்குறள்களை நாம், `ஏதோ ஒரு வாசகம்' என்ற அளவிலும் கடந்துபோகிறோம். ஆனால், கரூர் மாரியம்மன் கோயில் வடபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியரான குட்டி கணேசன் என்கிற 86 வயது முதியவர், தான் ஓய்வுபெற்ற நாளிலிருந்து தினமும் ஐம்பது பேரிடமாவது திருக்குறளின் மேன்மை குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, விழிப்புஉணர்வு ஏற்படுத்திவருகிறார். திருவள்ளுவர் தினத்தன்று மட்டும் ஆயிரம் பேரிடம் அந்தத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பாராம். நான்கு பேர் கூட்டமாக நிற்பது தெரிந்தாலே, அவர்களிடம் திருக்குறளின் மேன்மையை எடுத்துக்கூறத் தொடங்கிவிடுகிறார்.

 கரூர் திருக்குறள் தாத்தாதிருக்குறள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்த குட்டி கணேசனை சந்தித்துப் பேசினோம்...

``தமிழ் மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று திருக்குறள். தமிழில் அது எழுதப்பட்டதால், அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். திருக்குறளை ஆழ்ந்து படித்தால் போதும், உலகில் நடக்கும் அநேக தவறுகள் தடைபட்டுவிடும்" என்று முன்னுரை கொடுத்தவர், பொருளுரைக்கு வந்தார்.

``நான் 1953 டு 1955 வரை திருச்சி மங்கம்மாள் கட்டடத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிபெற்றேன். அப்போது, எங்கள் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர், திருக்குறளைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு, அதற்கான விளக்கமும் தருவார். அப்போதே திருக்குறளின் மேன்மையைப் புரிந்துகொண்டேன். எந்த இலக்கியம், தத்துவங்களைவிடவும் திருக்குறள் பல படிகள் மேல் என்று அப்போது உணர்ந்தேன். தினம் ஒரு திருக்குறள் படித்தேன். ஆனால், கொஞ்ச காலம்தான் படிக்க முடிந்தது.

முன்னூறு குறள்கள் வரை மனப்பாடமாகச் சொல்வேன். 1955-ம் ஆண்டில் நெரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணி கிடைத்தது. மாணவர்களுக்கு வரலாறு தெரிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட வாழ்வியலைச் சொல்லித்தரும் திருக்குறளைத் தெரிந்துகொள்வது அதிமுக்கியம் என்பதால், திருக்குறள் வகுப்பையே மாணவர்களுக்கு அதிகம் எடுப்பேன். 1991-ம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றேன். அதிலிருந்து சொந்தக் காசில் திருக்குறளின் பெருமைகளைத் துண்டுப் பிரசுரங்களில் அச்சடித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மக்கள் கூட்டங்களிலும் விநியோகிக்கத் தொடங்கினேன். 


  திருக்குறள்

என் திருக்குறள் ஆர்வத்தைப் பார்த்து, பல பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் பற்றிப் பேச அழைத்தார்கள். அப்போதான், ஒரு பள்ளி மாணவன் எனக்குத் தெரியாத திருக்குறளின் முதல் அடியைச் சொல்லி, சொல்லச் சொன்னான். நான் திணறினேன். அன்று முடிவுசெய்தேன், `நாம் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறோம் என்றால், முதலில் நாம் அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்' என்று. 1995-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டு வரை திருக்குறள் பற்றிய போதனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தேன். 1,330 குறள்களையும் எப்படிக் கேட்டாலும் சொல்லும் அளவுக்கு மனப்பாடம் செய்தேன். அதன் பிறகு, இன்னும் வேகமா திருக்குறள் பற்றிப் பேசத் தொடங்கினேன். இதோ, சென்ற திருவள்ளுவர் தினத்தன்றும் ஆயிரம் பேரிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்தேன். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்திருப்பேன். ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் பற்றிப் பேசியுள்ளேன். என் மூச்சு இருக்கும் வரை, திருக்குறள் பரப்புரையைச் செய்துகொண்டே இருப்பேன்" என்றவர்,

 திருக்குறள்

``மகாத்மா, தன் வாழ்வில் திருக்குறள் கருத்துகளையும் வழிகாட்டியாக எடுத்துச்செயல்பட்டிருக்கிறார். காந்தி ஒருமுறை திருச்சி வந்தபோது, `தூங்குதல் போன்றது சாக்காடு தூங்கி விழிப்பது போன்றது பிறப்பு'ங்கிற திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசினார். காந்தியும் திருவள்ளுவரும் ஒன்றுதான். இருவரும் இந்தியர்களுக்குக் கிடைத்த இரு கண் போன்றோர். சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம், சர்வோதயம், இந்திய சுயராஜ்ஜியம் என்று ஐந்து முக்கியக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார் காந்தி. அவற்றின் சாராம்சத்தை உள்ளடக்கியதுதான் திருவள்ளுவர் படைத்த அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் எனும் மூன்று அதிகாரங்களில் உள்ள குறள்கள். அறத்துப்பால் என்றால் கணவன், பொருட்பால் என்றால் மனைவி, காமத்துப்பால் என்றால் குடும்பம். இதைத்தான் காந்தியின் கொள்கையும் வலியுறுத்துகிறது. அதனால், காந்தியமும் வள்ளுவமும் படித்தால், உலகத்தில் எந்தப் பிணக்குகளும் ஏற்படாது. தினமும் ஐம்பது பேருக்காவது இதைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தால்தான் எனக்குத் தூக்கமே வரும். சிலர் அதை வாங்கப் படிப்பர்; பலர் அதை வாங்கிய நொடியிலேயே தூக்கி எறிந்துவிடுவர். மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் பென்ஷன் பணத்தில் இதைச் செய்துகொண்டிருக்கிறேன். எங்கே போனாலும் நடந்தே செல்வேன். இரவு நேரத்தில் வீட்டில் பிள்ளைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறேன். காந்தியின் அகிம்சையும் திருக்குறளின் கருத்துகளையும் பார்த்து, இருபது வயதிலிருந்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். திருக்குறள் தனிப் பாடமாக வைக்கவேண்டும். இதுதான் நான் அரசுக்கு வைக்கும் கோரிக்கை" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close