Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’150 பேர் கொண்ட கட்சி எங்களை விமர்சிப்பதா?’ பா.ஜ.க-வை கலாய்த்த காங்கிரஸ்!

”சபாநாயகர் வைத்திலிங்கம் மிகவும் திறமையானவர். ஏற்கெனவே முதலமைச்சராக இருந்தவர். அவரது தந்தையும் முதல்வராகப் பதவி வகித்தவர். எனவே, அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறுபவர்கள்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்” என்று பா.ஜ.க-வினரை விமர்சித்திருக்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கான நியமன எம்எல்ஏ-க்களை மத்திய பா.ஜ.க அரசு நேரடியாக நியமித்தது. ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரை இல்லாமல் நியமிக்கப்பட்ட அந்த மூவருக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாசில் ரகசியப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், மாநில அரசின் பரிந்துரை இல்லாமலும் சபாநாயகரால் பதவிப்பிரமாணம் செய்யப்படாததாலும் அந்த மூன்று பேரின் நியமனமும் செல்லாது என்று அறிவித்தார் சபாயாநகர் வைத்திலிங்கம். அவரைப் பதவி விலகக் கோரி பா.ஜ.க-வினர் புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டனர். அப்போது காங்கிரஸ் அரசையும் முதல்வர் நாராயணசாமியையும் கடுமையாக விமர்சித்தவர்கள், சபாநாயகர் வைத்திலிங்கத்தை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கோஷம் எழுப்பினர்.

இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்த சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ’மத்திய அரசு நியமன எம்எல்ஏ-க்களை நியமித்தது எனக்குத் தெரியாது எனத் துணைநிலை ஆளுநர் கூறினார். மாநில முதலமைச்சரும் பரிந்துரை செய்யாத நிலையில் அவர்கள் மூவரையும் யார்தான் பரிந்துரை செய்தது எனத் தெரியவேண்டும். புதுச்சேரி பா.ஜ.க-வில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என மொத்தமே 150 பேர்தான் இருப்பார்கள்.  இவர்களுக்குக் காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் அரசைப் பற்றியும் விமர்சிக்கவோ முதல்வர் மற்றும் சபாநாயகரின் உருவப்படங்களை எரிப்பதற்கோ தகுதியில்லை.’ என்றார்

மேலும் அவர் கூறுகையில், ‘மத்திய அரசிடம் இருந்து நியமன எம்எல்ஏ-க்கள் தொடர்பாக எந்த ஆவணமும் வராததால் அந்த நியமனம் செல்லாது என சபாநாயகர் கூறியிருந்தார். லட்சுமி நாராயணன் எம்எல்ஏ-வும் உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அரசுக்கு ஆதரவாகவே நீதி கிடைக்கும். புதுச்சேரி சட்டமன்றத்தில் இருக்கும் 30 எம்எல்ஏ-க்களில் காங்கிரஸ், தி.மு.க, சுயேட்சை உள்ளிட்ட 18 எம்எல்ஏ-க்களின் ஆதரவு எங்கள் அரசுக்கு இருக்கிறது. அதனால், மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் அரசை முடக்க முடியாது’ என்றார்.

முதல்வர் நாராயணசாமி குறித்து விமர்சிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கந்தசாமி, ’கடந்த ஓர் ஆண்டில் முதல்வர் நாராயணசாமி 50 முறைக்கும் மேல் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களிடம் நிதி கேட்டிருப்பார். ஆனால், சந்திக்கும்போதெல்லாம் நிதி தருவதாக உறுதியளிக்கும் அமைச்சர்கள் பின்னர் தருவதில்லை. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை செயல்படவிடாத வகையில் செயல்படும் ஆளுநரை மத்திய அரசு நியமித்துள்ளது. சபாநாயகர் வைத்திலிங்கம் மிகவும் திறமையானவர். ஏற்கெனவே முதலமைச்சராக இருந்தவர். அவரது தந்தையும் முதல்வராகப் பதவி வகித்தவர். எனவே, அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறுபவர்கள்தான் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்” என்று கடுமையாகப் பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close