Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மண்ணையும் மக்களையும் காக்க பார்த்தீனியம் ஒழிப்போம்

நாம் மார்க்கெட்டில் வாங்கும் கொத்தமல்லிக் கட்டில் பாதிக்கும் மேலே பார்த்தீனிய செடிகள் கலந்து வருகின்றன. இதை அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தியே வருகிறோம். அங்கிருந்தே ஆரம்பிக்கிறது ஆபத்து. அது சரி என்ன இந்த பார்த்தீனியம் பார்ப்போமா? உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடிய 1956-ம் ஆண்டு இந்தியா  அமெரிக்காவிலிருந்து கோதுமையை மும்பைத் துறைமுகத்தின் வழியே இறக்குமதி செய்தது. அப்போதுதான் நுழைந்தது இந்த பார்த்தீனிய பாம்பு. நிலங்களையும், உயிர்களையும் பாதிக்கும் இந்த பார்த்தீனியம் மோசமான களைச்செடி அப்போது முதல் வேகமாக பரவத்தொடங்கியது. ஒரே ஒரு பார்த்தீனிய செடி 2000 முதல் 5000 வரையான விதைகளை உருவாக்குகிறது. இதனாலே வேகமாக பரவுகிறது. 20 ஆண்டுகள் வரை கூட உறக்கத்தில் இருந்து முளைக்கக் கூடியது. இப்படி பரவிதான் தற்போது இந்தியாவில் 42 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் வளர்ந்து நிற்கிறது.

பார்த்தீனியம்

பார்த்தீனியம் வளரும் நிலங்களில் வேறு எதையும் வளர விடுவதில்லை. மண்ணின் சத்தை இவை அழிக்கிறது. இந்த செடியை தொட்டால் தோலில் அரிப்பு, தடிப்பு உண்டாகும். இதை உண்ணும் மாடுகளின் பால் கசப்பாகிறது.  இதன் பூக்களால் ஆஸ்த்மா உண்டாகிறது. விளைச்சல் நிலத்தில் பரவும் இந்த செடியால் பாதியளவு விளைச்சல் குறைகிறது. இவை கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய ஆபத்தாகிறது. இதனால், பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது. சொறி, கரப்பான் நோயை உருவாக்குகின்றன. பார்த்தீனியன், அம்புரோசின் என்ற நச்சு வேதிப்பொருள்களை இவை உருவாக்கி மற்ற தாவரங்களை அழிக்கிறது.  இப்படி பல்வேறு நாசத்தை உண்டாக்கும் இந்த செடிகள் அகற்ற வேண்டிய ஆபத்தான விஷயம்.

மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றிய இந்த பார்த்தீனியச் செடி உலகெங்கும் பரவி ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா கண்டங்களில் பெரும் அழிவை உண்டாக்கி உள்ளது. ஒன்றரை மீட்டர் அளவுக்கு மேலாக வளர்ந்து பரவி விரியும் இவைகளை அழிப்பது நமது முதல் கடமை. பார்க்க கொத்தமல்லி போலவே இருக்கும் இவைகளை நன்கு ஆராய்ந்து நீக்கி விடுங்கள். உப்பையும், சோப்பு எண்ணையையும் நீரில் கலந்து தெளிப்பதால் இந்த செடிகளை அறவே ஒழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. மண்ணையும் மக்களையும் காக்க, வேலிக்காத்தானைப் போலவே இந்த பார்த்தீனிய செடிகளை அழிப்பதுவும் காலத்தின் கட்டாயம்தான். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close