Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை... கார் சாகுபடி பொய்த்ததால் கலங்கும் விவசாயிகள்!

தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனதால், கார் சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கார் சாகுபடியையும் அக்டோபர் மாதம் பெய்யும் வடகிழக்குப் பருவமழையை நம்பி பிசான சாகுபடியையும் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகளால் பயிர் செய்ய முடியவில்லை. பயிரிட்ட சில விவசாயிகளாலும் நிலத்துக்குத் தேவையான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துபோனதால், கடனாளி ஆகினர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்து பெய்த மழையால், வறண்டுகிடந்த குளத்துக்கும் அணைகளுக்கும் நீர் வரத்து இருந்தது. ஆனால், சில நாள்களிலேயே பருவமழை விவசாயிகளை ஏமாற்றியது.     

கடந்த 45 நாள்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியபோதிலும், இதுவரை தொடர்ச்சியாக மழைப்பொழிவு இருக்கவில்லை. அதனால், அணைகளின் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இனிமேல், பருவமழை நீடிக்குமா? என்கிற கேள்வி, விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. அதனால், விவசாயப் பணிகளைத் தொடங்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். நடவுப் பணிகளைத் தொடங்க இருந்த விவசாயிகள், பணிகளைத் தொடராமல் காத்திருக்கிறார்கள்.

அணைகளிலும் விவசாயத்துக்குப் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை. தற்போது இருக்கும் தண்ணீர், குடிநீர்த் தேவையைத் தீர்க்கவே போதுமானதாக இருக்குமா? என்கிற கவலை எழுந்துள்ளதால், அணைகளை நம்பி விவசாயப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயாரில்லை. அதனால் கார் சாகுபடி கைநழுவும் ஆபத்து உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையில், 51 அடி தண்ணீரே உள்ளது. நீர் வரத்து 60 கன அடி மட்டுமே இருப்பினும், குடிநீர் தேவைக்காக 254 அடி நீர் திறக்கப்படுகிறது. 156 அடி கொள்ளளவுகொண்ட சேர்வலாறு அணையில், 63 அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இதேபோல, 118 அடி கொள்ளளவுகொண்ட மணிமுத்தாறு அணையில், 34 அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 

தற்போதைய தண்ணீர் குடிநீர்த் தேவையை மட்டுமே பூர்த்திசெய்யும் என்பதால், விவசாயப் பணிகளைத் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். கடந்த ஆண்டு விவசாயம் செய்யாத நிலையில், இந்த வருடமும் பயிர் செய்ய முடியாத சூழல் உள்ளதால், குடும்பத்தை வழி நடத்திச்செல்வது எப்படி என்கிற கவலை விவசாயிகளை ஆட்டிப் படைக்கத் தொடங்கியிருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close