Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் புதிய அணி! இது கிணறு பஞ்சாயத்து

பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கு கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். ஊரில் உள்ள பொதுக்கிணற்றில் தண்ணீர் இல்லாததால்தான் இந்தநிலை. ஊர் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகக் காரணம், அந்தக் கிணற்றுக்கு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் மூன்று ராட்சத கிணறுகள் தோண்டப்பட்டு, அவற்றிலிருந்து அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுவதுதான். மேலும் ஓ.பி.எஸ்ஸின் தோட்டத்தில் நான்கு போர்வெல்லும் போடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் ஜூனியர் விகடனில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஓ.பி.எஸ்-க்குச் சொந்தமான தோட்டத்தில் இருக்கும் கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டு போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இந்த நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர், பெரியகுளம் காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 11-ம் தேதி, கிராம மக்களுக்கும், ஓ.பி.எஸ் தரப்புக்கும் இடையே முதல்முறையாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு), மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து சிலரும், கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 'ஓ.பி.எஸ் மனைவி பெயரில் இருக்கும் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை தானமாகவோ அல்லது கிரயமாகவோ லட்சுமிபுரம் கிராம மக்களுக்கு கொடுக்க முடியாது' என ஓ.பி.எஸ் தரப்பில் பங்கேற்ற சந்திரசேகரன் தெரிவித்தார். இதனைக் கேட்ட கிராம மக்கள் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டனர். அன்று மாலை, ஊர்மக்கள் ஒன்றுகூடி, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினர். இதையடுத்து. ஓ.பி.எஸ். தரப்பினரைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கிராமத்தினர் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

அதன்படி, ஜூலை 12-ம் தேதி காலை கிராமமக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புக்கொடியுடன், கையில் காலிக்குடங்களுடன் பெண்கள் உள்ளிட்டோர் சாலையோரம் அமர்ந்து ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், 'ஓ.பி.எஸ் தோட்டத்தில் அமைந்துள்ள மூன்று கிணற்றில் இரண்டு கிணற்றை ஊர்மக்களின் பயன்பாட்டுக்கு எழுதிவைக்க வேண்டும்' என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த கிராம மக்களுக்கு அழைப்பு விடப்பட்டது. கிராம மக்கள் சார்பில் சிலர், மதியம் ஒரு மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

ஓ.பி.எஸ் தரப்புக்கும், கிராம மக்கள் தரப்புக்கும் இடையே மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், வைகை அணை மற்றும் சோத்துப்பாறை அணையில் இருந்து கிராமத்துக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த தேவையான பணத்தில் ஓர் பங்கு தருவதாகவும் ஓ.பி.எஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு கிராம முக்கியஸ்தர்கள், "எங்களுக்கு தண்ணீர் மட்டும் பிரச்னை இல்லை; ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலமும், அதற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத பிரச்னையும் உள்ளது. குடிக்கத் தண்ணீர் வாங்கிக்கொண்டு, நாளை விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. எனவே, இரண்டு கிணறுகளை ஊருக்கு எழுதிவைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். இதுகுறித்து ஆலோசிப்பதாக ஓ.பி.எஸ் தரப்பில் சொல்லப்பட்டது. பேச்சுவார்த்தை முடிந்து போராட்டப் பந்தலுக்கு திரும்பிய கிராம முக்கியஸ்தர்கள், பேச்சுவார்த்தை விவரங்களை ஊர் மக்களுக்குச் சொன்னார்கள். இதனைக் கேட்ட மக்கள், "கிணறை மீட்காமல் நாம் எந்த வேலைக்கும் செல்லக்கூடாது. நமக்கு அந்த கிணறு வேண்டும். நம் வருங்கால சந்ததிக்கு அந்தக் கிணறு தேவை" என்று கூறினர். ஊருக்குக் கிணறு கிடைக்கும்வரை, பல போராட்டங்களை நடத்துவது என்று மக்கள் முடிவுசெய்திருப்பதாக கிராம முக்கியஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

'மக்களின் தொண்டே மகேசன் தொண்டு' என்பார்கள். ஆனால், ஓ.பி.எஸ்ஸூக்கு அப்படி இல்லை போலும்…

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close