Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணிநிரந்தரம் செய்யப்படுவார்களா பகுதிநேர ஆசிரியர்கள்! - தவிப்பில் 15 ஆயிரம் குடும்பங்கள்!

"பாடப்புத்தகங்கள் மட்டுமல்ல... அதற்கு வெளியிலும் மாணவர்களின் திறமையை வளர்க்க வேண்டும்" என்று கடந்த ஆறு ஆண்டுகளுக்குமுன் விளையாட்டு, கணினி, கட்டடக்கலை, இசை, ஓவியம் போன்றவற்றுக்கு பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தது தமிழக அரசு. ஆனால், இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்யாததால், தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுசம்பந்தமாக, வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் ஒரு மாநாடும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் பகுதிநேர ஆசிரியர்கள்.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2012-ம் ஆண்டில், சட்டப்பேரவை 110 வது விதியின்கீழ், தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 2014-ம் ஆண்டில் ரூபாய் 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூபாய் 7 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இடைநிலை மாணவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாள் வீதம், மாதத்தில் 12 அரை நாள்கள் பணியாற்ற உத்தரவிடப்பட்டது. இதற்கான தொகுப்பூதியம் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பணியமர்த்தப்பட்ட ஆறு ஆண்டுகளில் ஒருமுறைதான் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக், ஊரக வளர்ச்சித் துறை, வட்டார வளர்ச்சித் துறை, மகாத்மா காந்தி தேசிய உறுதித் திட்டப்பணி எனப் பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

சட்டசபையில், ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது. ஆனால், 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. நிலுவையில் உள்ள மே மாதத் தொகுப்பூதியமான 52 கோடி ரூபாயை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்; பள்ளிக் கல்வித்துறை மூலம் எங்களை மாநில அரசோடு இணைக்க வேண்டும். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுவதைப் போன்று எங்களுக்கும் வழங்க வேண்டும்; சமவேலை - சமஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர்கொடுத்த நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரின் தீர்ப்பை தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். பணியின்போது இறந்த 150 பேரின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியின் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களை இருவேறு நிலைகளில் பணியமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியராகவும் மறுபிரிவினர் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி வருவதுக்கு தமிழக அரசு தீர்வுகாண வேண்டும். இதுகுறித்து பலமுறை சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அப்போதெல்லாம் 'பரிசீலனையில் உள்ளது' என்ற பதில்தான் வந்தது. ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதுகுறித்து துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், அதற்கான பலன்தான் இப்போதுவரை இல்லை. இனிமேலாவது அரசு எங்கள்மீது சிறப்பு கவனம் செலுத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்" என்றார்.

தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்....!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close