Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனது வேதனையை வித்தியாசமாக வெளிப்படுத்திய பியூஷ் மனுஷ்!

'சேலமே குரல் கொடு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறைக்குள் காவலர்களால் தாக்கப்பட்டார். இதற்குத் தமிழக அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்தச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்தச் சம்பவத்தை வித்தியாசமான முறையில் கடைப்பிடித்துள்ளார் பியூஷ்.

பியூஷ் மனுஷ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல்

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ்...


"கடந்த ஆண்டு இதே நாள் சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னை இருட்டறையில் அடைத்து நான்கைந்து குண்டர்களோடு 'இனி நீ யோசிக்கவே கூடாது' என்று கூறி கதறக் கதற... அடித்தார். அதன் பிறகு, பல சட்டப் போராட்டம் நடத்தி வெளியே வந்துவிட்டேன். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாது நாள். சிறைத்துறை அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கையும், மக்கள் எதையும் யோசிக்காமல் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்ற பாசிச சிந்தனைகளைத் தவிடு பொடியாக்கும் தினமாக இதை கடைப்பிடித்து சிறைக் காவலர்களுக்கு இனிப்பு வழங்குகிறேன்'' என்று சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சிறைக் காவலர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஆனால், காவலர்கள் இனிப்புகளை வாங்க மறுத்துவிட்டதால் பொதுமக்களுக்கு வழங்கி அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தினார்.

இதுபற்றி சேலமே குரல் கொடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷிடம் பேசியபோது, ''கடந்த ஆண்டு இதே தினத்தில் சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காகக் குழிகளைத் தோண்டிக்கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே சேலம் ஆனந்தா பாலம் கட்டுவதற்கு குழிகளைத் தோண்டி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி முடிக்காமல் இருந்ததால் மக்கள் போக்குவரத்துக்கு பெரிதும் சிரமப்பட்டார்கள்.

அதேபோல, இந்தப் பாலத்துக்கும் குழியைத்  தோண்டிப் போட்டுவிட்டு பணியைத் தொடராமல் இருந்தால் மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமப்படுவார்கள் என்று பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்களோடு நானும் போராட்டக் களத்தில் குதித்து 'பாலம் கட்டும் வரை மக்கள் சென்று வர மாற்றுப் பாதை அமைக்கக் கொடுத்துவிட்டு குழியைத் தோண்டு' என்று போராட்டம் செய்தோம். அதற்கு என்மீது பல பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தார்கள். அதற்கு நான் கவலைப்படவில்லை. ஆனால், அடைக்கப்பட்ட அன்று இரவு சிறைத்துறை எஸ்.பி செந்தில்குமாரும் அடியாள்கள் 4 பேரும் சேர்ந்து என்னை இருட்டறைக்குள் இழுத்துச் சென்று நாயை அடிப்பதுபோல அடித்துக் கொலைசெய்ய முயன்றார்கள். அதற்கு வீடியோ சாட்சியும் சில சிறைவாசிகளின் வாக்குமூலமும் இருக்கிறது.

'எதற்காக என்னை அடிக்கிறீர்கள். சிறைத்துறை விதிப்படி ஒரு சிறைவாசியை அடிக்கலாமா  என்று கேட்டேன்'. அதற்கு, 'நீ இப்படி யோசிக்கக் கூடாது. மக்கள் பிரச்னைகளில் நீ தலையிடக் கூடாது. இதற்கு சம்மதித்தால் உன்னை அடிக்க மாட்டோம். இல்லையென்றால் தொடர்ந்து அடித்துக் கொலை செய்துவிடுவோம்'' என்று சிறைத்துறை எஸ்.பி செந்தில்குமார் என்னை கண்முன் தெரியாமல் அடித்தார்.

அதன் பிறகு, என் குடும்பத்தாரும் என் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பல போராட்டங்கள் செய்து என்னை வெளியே கொண்டு வந்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நியாயம் வெல்லும் எனக் கருதுகிறேன். அரசும் அதிகார வர்க்கமும் மக்கள் யோசிக்கக் கூடாது, சிந்திக்கக் கூடாது என்று செயல்படுவதை மக்கள் அறிந்து விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாளை கொண்டாடுகிறேன்'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close