Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கலைஞர் விருது மட்டுமல்ல; புதிய கட்டடமும் தயார்!’- சுறு சுறு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்

உலக தமிழ் செம்மொழி மாநாட்டை, கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம்  கோயம்புத்தூரில் வெகு விமர்சையாக நடத்தினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த மாநாட்டின் ஒருபகுதியாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்’ தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியின் மூலமாக ஆண்டுதோறும் தனது பெயரால் விருது வழங்க, ஏற்பாடு செய்தார். இதன் முதல் விருதை, 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோப்ர்ப்போலாக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுடன் பத்து லட்ச ரூபாய் பணமும், ஐம்பொன்னிலான கருணாநிதியின் உருவச் சிலையும் பரிசாக வழங்கப்பட்டது. 

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

2011-ம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, இந்த விருது கிடப்பில் போடப்பட்டது. காரணம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக தமிழக முதல்வர்தான் இருப்பார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சிமன்றக் குழுவே கூட்டப்படவில்லை. இந்தக் குழு கூட்டப்பட்டால்தான் விருது வழங்குவது உள்ளிட்ட இதரப் பணிகள் குறித்து முடிவெடுக்க முடியும். இந்நிலையில், ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக, அறிவிப்பு வெளியிட்டுள்ளது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். 

இந்த அறிவிப்பு குறித்து அறிய, அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரகாசம் அவர்களைச் சந்தித்தோம். “வேறு எந்த மொழியிலும் இலக்கியம் சார்ந்த விருதுக்குப் பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுவதில்லை. இந்த விருதைப் பொறுத்தவரை, முதல் விருது வழங்கியதற்கு என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே நெறிமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருவதால், கூட்டத்தொடர் முடிந்த பின்பு முதல்வர் எங்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.  

அதேபோல், செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு என்று சோழிங்கநல்லூர் அருகே பெரும்பாக்கம் பகுதியில் 17  ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட, மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இந்தத் திட்டம் முடங்கியது. தற்போது இந்தக் கட்டடத்தை நிறைவு செய்யும் பணிகள் வேகம் எடுத்து வருகின்றன. “தமிழுக்குத் தொண்டாற்றும் எண்ணத்தோடு செயல்பட்டால் மொழி குறித்து இன்னும் அதிகமான ஆய்வுகளை எங்களால் செய்ய முடியும். அரசியல் கலப்பில்லாமல் இருந்தால் போதும்” எனத் தொடங்கிய மையத்தின் இயக்குநர் பழனிவேலிடம், ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியானதே?’ என்றோம். "இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அப்படியே இணைத்தாலும், இந்த மையம் இங்கிருந்துதான் செயல்படும். இதனால் இங்கு நடைபெறும் தமிழாய்வுப் பணிகள் எதுவும் முடங்கிவிடாது. தொடர்ந்து ஆய்வுகள் நடக்கும். கடந்த மாதம் அலுவல் பணியாக டெல்லி சென்று வந்தேன். அப்போதுகூட இந்த இணைப்புப் பற்றியோ அல்லது அது தொடர்பான ஆலோசனை நடைபெறுவது பற்றியோ எந்தத் தகவலும் இல்லை” என்றார் நிதானமாக.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close