Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விபத்தில் பலியான பொறியியல் மாணவரின் கருவிழிகள் தானம்!

நெல்லையில் சாலை விபத்தில் உயிர் இழந்த மாணவரின் விழிகள், பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டன. அதனால், உயிரிழந்த பின்னரும் அந்த மாணவன் உலகைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நெல்லை அருகே உள்ள தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரம்மநாயகம். சேரன்மகாதேவியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் பேருந்து மூலமாக கல்லூரிக்குச் சென்று வரக்கூடிய பிரம்மநாயகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

பேருந்து படிக்கட்டில் அவர் பயணம் செய்துள்ளார். சேரன்மகாதேவி சாலை, கடந்த பல வருடமாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. கொழுமடை என்ற இடத்தில் பேருந்து சென்றபோது அங்கு சாலையில் இருந்த குழியில் பேருந்து குலுங்கியது. இதில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த பிரம்மநாயகம் சாலையில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவரது இழப்பால் குடும்பத்தினர் சோகம் அடைந்தனர். இருப்பினும், தனது மகனின் விழிகள் இந்த உலகத்தைப் பார்க்கட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அவரது பெற்றோர் கருவிழிகளைத் தானமாகக் கொடுக்க சம்மதித்தனர். உடனடியாக அவரது விழிகளை மருத்துவர்கள் அகற்றி பத்திரமாக பாதுகாத்தனர். மகன் இறந்த துக்கத்திலும் பிறருக்கு உதவும் வகையில் செயல்பட்ட, பிரம்மநாயகத்தின் பெற்றோரின் மனிதாபிமானம் பாராட்டுக்குரியது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close