Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரோம் ஷர்மிளாவை வெளியேற்ற சதி!- குற்றம் சாட்டும் மனித உரிமை செயற்பாட்டாளர்

மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப்போராளி இரோம் ஷர்மிளா. அம்மாநில ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து பதினாறு ஆண்டுகள் அறவழிப்போராட்டம் நடத்தி சில மாதங்களுக்கு முன் போராட்டத்தைத்  திரும்ப பெற்றவர். அதன் பின்பு அரசியலில் ஈடுபட்டார். அதில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்த இரோம் ஷர்மிளா, மணிப்பூர் மாநிலத்தைவிட்டு தமிழகத்துக்கு வந்துவிட்டார். அமைதி வேண்டி கொடைக்கானலில் தங்கியுள்ளார். அவர், அயர்லாந்தை சேர்ந்த சமூகப் போராளி தேஸ்மந்த் கொட்டிக்னிக்கோவை மணமுடிக்கப் போவதாக அறிவித்து, கடந்த 12 ஆம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்துவரும் வேளையில், கொடைக்கானலில் தங்கியிருந்து இரோம் ஷர்மிளா திருமணம் செய்து கொள்ளக் கூடாது, கொடைக்கானலை விட்டு வெளியேற வேண்டுமென்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், சார்பதிவாளரிடம் மனு கொடுத்தார். ''கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பழங்குடியினர் அதிக அளவில் வாழ்கின்றனர். இவரது போராட்டம் மீண்டும் தொடரும் என்ற அறிவிப்பால் இப்பகுதி அமைதி கெடும். சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறையும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இரோம் ஷர்மிளா திருமணத்தை எதிர்ப்பதாக'' கூறியுள்ளார். இவரின் ஆட்சேப மனுவுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமூகப்போராளி ஒருவர் மண வாழ்க்கையில் ஈடுபடுவது பெரிய குற்றமா? மணிப்பூரைச் சேர்ந்தவர் கொடைக்கானலில் வசிக்க உரிமை இல்லையா? என்ற பல கேள்விகள் பொது வெளியில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் செல்வகோமதி, ''ஒரு மனிதனின் திருமணம், மண வாழ்க்கை ஒப்பந்தம், இவையாவும் தனி மனித உரிமைகளாகும். இன்னாரைத்தான் திருமணம் செய்ய வேண்டும், இப்படித்தான் திருமணம் செய்ய வேண்டும், இந்த ஊரில்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று தனிமனித உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இதை எந்த நாகரிக சமுதாயமும் பொறுத்துக் கொள்ளாது. அப்படிப்பட்ட தலையீடுகள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். அநீதிக்கெதிராக மக்களைத் திரட்டுவது ஜனநாயக உரிமை. பழங்குடியினர் பாதிக்கப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு உணர்வற்ற நிலையில் இருப்பது அரசியல் சாசனத்துக்கு செய்யும் துரோகமாகும். கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா  தங்கியிருந்தால் பொது அமைதி பாதிக்கப்படும், அவரை வெளியேற்ற வேண்டுமென்று சொல்வதில் சதித்திட்டம் இருப்பதாக உணர்கிறோம். தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு இரோம் ஷர்மிளாவுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூக ஆர்வலர் என்ற போர்வையில் அவருக்கு எதிராக பொய்யான தகவலைப் பரப்பும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களைப் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவருக்குத் துணை நிற்போம்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close