Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடத்தப்பட்டதா நம் ராக்கெட் தொழில்நுட்பம் - இஸ்ரோ சஸ்பெண்ட் பின்னணி

நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தின் மூத்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியது காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் திரவ இயக்க அமைப்பு மையம் அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் உள்நாட்டுத் தயாரிப்பான ராக்கெட்டுகளுக்கான முக்கிய பாகங்கள் இந்த மையத்தில் தயாராகின்றன. இந்த மையத்தின்  ஆராய்ச்சி வளாகத்தில் விதிமுறை மீறல்கள் நடப்பதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த மையத்தின் இயக்குநரான ஜெசி ஃபுளோரா, வளாகத்தின் பொது மேலாளரான ஜேசம்மாள், பொறியாளர் செபாஸ்டின் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்தனர். 

இஸ்ரோ

இஸ்ரோ மையத்தின் கட்டுபாட்டில், மிகவும் பாதுகாப்பு மிகுந்த அலுவலகத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஏற்கெனவே, இந்திய ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கடத்தியதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயர் பொறுப்பில் இருந்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கடத்தியதாகப் புகார் செய்யப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளில் அவர் அந்தக் குற்றச் சாட்டில் இருந்து மீண்டார். இருப்பினும், அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும் உள்ள இஸ்ரோ மையங்களில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டது.

மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்க அமைப்பு மையமானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மையத்தைச் சுற்றிலும் கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த மலைப் பகுதியில் சுற்றித் திரிந்த வட மாநில இளைஞர் பிடிபட்டார். அவரை பிடித்து விசாரித்த பாதுகாப்புப் படையினர், ‘மனநிலை சரியில்லாதவர்’ எனத் தெரிவித்து விடுவித்தனர்,. 

இது போல, இரண்டுக்கும் மேற்பட்ட சமயங்களில் மனநோயாளிகள் எனச் சொல்லப்பட்டவர்கள், பலத்த பாதுகாப்புகளையும் மீறி மலைப் பகுதியில் சுதந்திரமாகச் சுற்றும்போது பிடிபட்டனர். அத்துடன், மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ வளாகத்துக்குள் ஆள் இல்லாத விமானங்கள் கடந்த வருடமும் இந்த வருடமும் சுற்றியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தொடர்பாக இந்த மையத்தின் சார்பில் விளக்கமோ மறுப்போ தெரிவிக்கப்படாதது மர்மமாகவே இருந்தது.  

இந்த நிலையில், மூத்த அதிகாரிகள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்குக் காரணம், அவர்கள் ராக்கெட் ரகசியத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியதாக இருக்கலாம் என்கிற கருத்து எழுந்துள்ளது. ராக்கேட் தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளை விடவும் முன்னிலையில் இருக்கிறது. உள்நாட்டுத் தொழில்நுட்பம் இந்தத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வெளிநாடுகளும் தங்களது செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட்டுகள் மூலமாகவே விண்ணுக்கு அனுப்புகின்றன. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் இந்தியாவில் இருந்து ரகசியங்கள் கடத்தப்பட்டு இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் கிளப்பி வருகின்றனர்.

இது குறித்து மகேந்திரகிரி விஞ்ஞானிகள் சிலரிடம் பேசியபோது, ’’ராக்கெட் ரகசியம் எதுவும் கடத்தப்படவில்லை. அப்படி வெளியாகும் தகவல்களில் உண்மை எதுவும் கிடையாது. உந்தும இயக்க வளாகத்தின் பொறுப்பில் இருந்த அதிகாரிகள், அந்த மையத்துக்காக எலக்ட்ரிகல் பொருட்களை வாங்கியதில் முறைகேடுகளைச் செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனால், அவர்கள் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த மோசடிக்குக் காரணமாக இருந்த மையத்தின் இயக்குநர், பொது மேலாளர், பொறியாளர் என மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு நிதிமோசடி செய்து இருப்பது தெரிய வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்குத் துணையாக வேறு அதிகாரிகள் யாரும் இருந்தார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது’’ எனத் தெரிவித்தனர்.

ராக்கெட் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தின் சர்ச்சை இன்னும் ஓயவில்லை என்பதே தற்போதைய நிலைமை.  

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close