Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பணம் கொடுத்தால் பாஸ்போர்ட்'  தமிழக போலீஸாரின் லஞ்சப் பக்கங்கள்

ஐ.எஸ். தீவிரவாத

 சென்னையில் பாஸ்போர்ட்டுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பித்தாலும் விசாரிக்கவரும் மாநகர நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்குப் பணம் கொடுத்தால் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்பது நிரூபணமாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களுக்குகூட பாஸ்போர்ட் கொடுக்க அறிக்கை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள் சென்னை போலீஸார். 

பாஸ்போர்ட்டுக்கு ரிப்போர்ட் கொடுத்த வழக்கில் சிந்தாதிரிபேட்டை மாநகர நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் ஏட்டு முருகன் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தபால்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது இந்த வழக்கில் திடீர்த் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் குறித்து நுண்ணறிவுப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவதுண்டு. இதற்காக வீட்டுக்கு வரும் நுண்ணறிவு போலீஸார் கொடுக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும். ஆனால், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியில்லை என்றாலும் சில போலீஸார் கையூட்டு பெற்றுக் கொண்டு தவறான அறிக்கையைச் சமர்ப்பிப்பதாகத் போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. 
 இதற்கிடையில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலைய நுண்ணறிவு போலீஸ் ஏட்டு முருகன் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஏட்டுவை கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 இதையடுத்து போலீஸ் ஏட்டு முருகனுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் தபால்காரர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்தசமயத்தில்தான் தமிழக போலீஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது டெல்லி சம்பவம். 


 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டெல்லி விமான நிலையத்தில் போலீஸாரிடம் ஷாஜகான் என்பவர் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அவருக்குச் சிந்தாரிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் பாஸ்போர்ட் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவருக்குத் தஞ்சாவூரைச் சேர்ந்த முஸ்தபாவின் ஏற்பாட்டின்பேரில் பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாஜகான், ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஷாஜகான் கொடுத்த தகவலின் அடிப்படையில் முஸ்தபாவை போலீஸார் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  


 ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர் என்று கருதப்படும் நபர் சிந்தாதிரிபேட்டை முகவரியைக் கொடுத்துள்ளார். போலி ஆவணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தாமல் பாஸ்போர்ட்  வழங்க அறிக்கையை சென்னை மாநகர நுண்ணறிவு போலீஸார் கொடுத்துள்ளனர். இதையடுத்து டெல்லி போலீஸார், தமிழக போலீஸாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது, தமிழக போலீஸாருக்கு அவமானத்தை தேடிக் கொடுத்துள்ளது. 

பாஸ்போர்ட் விவகாரத்தில் இன்னும் சில போலீஸாருக்குத் தொடர்பு இருப்பதாகவும் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் டெல்லி மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை நடத்திவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் போலி பாஸ்போர்ட விவகாரத்தில் தீவிரவாத ஆதரவாளருக்குச் சென்னை போலீஸார் உதவினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது"என்றனர். 

பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பாஸ்போர்ட் விசாரணைக்காகத் தகவல் வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நுண்ணறிவு போலீஸாரை பாஸ்போர்ட் வாங்கி கொடுக்கும் ஏஜென்ட்கள் கவனித்துவிடுவதுண்டு. இதனால் விசாரணையில்லாமல் பாஸ்போர்ட் கொடுக்கலாம் என்ற அறிக்கையை சில நுண்ணறிவு போலீஸார் கொடுத்துள்ளனர். இதன்மூலம் நுண்ணறிவு போலீஸாரில் சிலர் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். அவர்களில் சிலர் வீடு, சொத்து என பினாமி பெயர்களில் வாங்கியிருக்கும் தகவலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. போலீஸ் ஏட்டு முருகனின் சொத்துவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உயரதிகாரிகள் வரை பங்கு உள்ளது"என்றார். 
 
ஏட்டு முதல் எஸ்.பி வரை 

 வருமானவரித்துறையின் விசாரணையில் பான்பராக், குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்ய சென்னை போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர் ஒருவர் மீது கமிஷன் வாங்கியதாகக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு இருந்தது. அடுத்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சென்னை போலீஸார் சிக்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்துக்கே பாதுகாப்பில்லை என்ற எதிர்கட்சியினரின் கேள்விக்குத் தூசியால் சி.சி.டி.வி.கேமராவில் பதிவான முகம் சரியாகத் தெரியவில்லை என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்கிறார். சென்னை போலீஸ் துறையில் கமிஷன் வாங்கும் கறுப்பு ஆடுகளை களை எடுக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சப்பைக் கட்டுகட்டுவது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close