Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம் – நீடிக்கும் மர்மம்”

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க. நிர்வாகிகள் மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும், அந்த மூன்று எம்எல்ஏ-க்களை பரிந்துரை செய்தது துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான் என்று குற்றம் சாட்டின. அதையொட்டி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தின. அதையடுத்து “நியமன எம்எல்ஏ-க்களுக்கான பரிந்துரையை தான் வழங்கவில்லை என்றும் அது மத்திய அரசின் முடிவு” என்று தெரிவித்தார் கிரண்பேடி.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணை தொடக்க நாள் விழாவிற்கு வருகை தந்திருந்த மத்திய இணை அமைச்சர் பாக்கன் சிங் குலாஸ்தேவ், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி புதுச்சேரி சட்டமன்றத்துக்கு நியமன எம்எல்ஏ-க்களை நியமிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கின்றது. இதை யாரும் மறுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற பல பிரச்னைகள் டெல்லியில் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமும், துணைநிலை ஆளுநரும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். துணைநிலை ஆளுநரின் பரிந்துரைப்படிதான் எம்எல்ஏக்கள் நியமனம் நடந்தது” என்றார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய இணை அமைச்சர் இருவரும் மாறுபட்டக் கருத்துகளை தெரிவித்தது மக்களைக் குழப்பமடையச் செய்தது. மத்திய அரசு இதனை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இந்நிலையில், கடலூரில் பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “புதுச்சேரியைப் பொறுத்தவரை, மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகே நியமன எம்எல்ஏ-க்களை நியமிக்க வேண்டும். மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசால் நியமன எம்எல்ஏ-க்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதனை மதிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மாநில அரசுதான் நியமிக்க வேண்டும் என்றால் எதற்காக ஒரு வருடம் காத்திருந்தார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம் புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் மத்திய அமைச்சர்களின் இருவேறு கருத்துகள் மக்களை மேலும் குழப்பமடைய வைத்திருக்கின்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close