Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டத்தையே மாற்றச் செய்த காமராஜர்!

குலக்கல்வி திட்டத்தை எதிர்த்தே காமராஜர் முதல்வர் பதவிக்கு வந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சியை உருவாக்கி பொற்கால ஆட்சியை தந்தவர் இவர் என்றாலும், காமராஜர் என்றாலே படிக்கச் செய்தவர் என்றே போற்றப்படுகிறார். கடைக்கோடி தமிழனுக்கும் க, ங, ச சொல்லிக்கொடுக்கச் செய்த கல்வி வள்ளல்தான் காமராஜர். ஒருமுறை காமராஜரை விமர்சித்து கவிஞர் நா.காமராசன் பேசப்போகிறார் என்பதை, தி.மு.க தனது போஸ்டரில் இப்படி எழுதி இருந்தது. "படிக்காத காமராஜரைப் பற்றி படித்த காமராஜர் பேசப்போகிறார்" என்று அச்சிட்டு இருந்தது. இதை தந்தைப் பெரியாரிடம் சுட்டிக்காட்டியபோது அவர் சொன்னார், 'உண்மை தானே இது, ஆனால், ஒரு சின்ன திருத்தம் போட்டு இருக்கணும். படிக்காத காமராஜரைப்பற்றி, காமராஜரால் படித்த நா.காமராசன் பேசப்போகிறார்னு" எத்தனை உண்மை இது.

காமராஜரின் ஆட்சித்திறனைப்பற்றி ஆயிரம் பக்கங்களுக்குப் புள்ளி விவரங்களால் நிரப்பலாம். அவரின் தியாக வாழ்வு, வெளிப்படையான நேர்மை, எளிமையான அணுகுமுறை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், மறக்க முடியாத அல்லது மறக்கக் கூடாத இவரின் சாதனை என்றால் அது கல்வியில் செய்த புரட்சிதான்.  அதனால்தான் இவரின் பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் பெருமையோடு நினைவுகூர வேண்டிய சம்பவம் ஒன்று உண்டு. ஆம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை முதன்முதலாக திருத்தும்படி செய்தவர் இந்த கர்ம வீரர்தான். அதுவும் கல்விக்காகத்தான். பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் அப்போதைய கம்யூனல் ஜி.ஓ சட்டம் இனி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றமும் அதன்பிறகு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

காமராஜர்

இது ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்கனவையே சிதைத்து விடும் என காமராஜர் அதிர்ந்தார். நாலெழுத்து படித்தால் மட்டுமே மனிதன் உருப்படுவான் என்று அவர் கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விட அவர் தயாரில்லை. எனவே, ஜவஹர்லால் நேருவிடம் உடனடியாக சொல்லி இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மாற்றச் செய்தார். இந்த அரசமைப்புச் சட்டம் உருவான சில மாதங்களிலேயே அதாவது,  1951-ம் ஆண்டிலேயே அதை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே அதில் மாற்றம் கொண்டு வந்தார். இதனால் பிறப்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்று உயரத்தொடங்கினர். இது இவர் செய்த சாதனைகளில் மகத்தானது என்று புகழப்பட்டது. தமிழகம் உள்ளவரை நினைவில் நிற்கும் தியாகத்தலைவரின் பிறந்த நாள் மற்றும் கல்விக்கான வளர்ச்சி நாள் இன்று.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close