Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இனயம் துறைமுகம் அமைந்தால் குமரி வறண்ட பூமியாக மாறும்': கொதிக்கும் மக்கள்!

 

கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும்  உச்சப் போராட்டம் இனயம் துறைமுகப் போராட்டம். ஆரம்பம் முதல் போராட்டம் வீறுகொண்டு நடக்கிறது. குமரிமாவட்டத்தில் இனயம் பகுதியில் துறைமுகம் அமைந்தால், இனயம் முதல் குளச்சல் வரை உள்ள 10 கிலோமீட்டர்  நீளமுள்ள கடலோரப் பகுதிகள் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மக்களுக்கு நிரந்தர இழப்புப் பகுதியாக மாறும். ஸ்பெயின் நாட்டு டிப்ஸா நிறுவனத் தொழில் நுட்ப பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இதர கட்டுமானங்களுக்காக துறைமுகப் பகுதியை ஒட்டி 7.5 சதுரகிலோ மீட்டர் நிலப்பகுதி கையகப்படுத்தப்படும் என ஆய்வு அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துறைமுகம் வரை ஆறுவழிச்சாலை 10.5 கிலோ மீட்டர் வரை அமைப்பதற்கும், அதேபோன்று 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைப்பதற்கும்  157  ஹெக்டேர் நிலப்பரப்பு குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பில் வாழும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேலான மீனவர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டு கட்டாயம் வெளியேற வேண்டிய சூழல் உருவாகும். துறைமுகம் அமைக்க கல் தேவைப்படும். அதற்காக  குமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் உடைக்கப்படும். துறைமுக நீர் தேவைக்கு குமரிமாவட்ட அணைகளின் நீர் உறிஞ்சப்படும்.

விளைநிலங்கள் அழிக்கப்படும், மீன் பிடித்தொழில் நிறுத்தப்படும், பச்சைபசலென இருக்கும் குமரி வறண்ட பூமியாக மாற்றப்படும். துறை முகத்தால் எந்த பயனும் இல்லை. பாதிப்புதான் அதிகம் என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். "சுனாமிக்கு பின் இப்போதுதான் மீனவ மக்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் எழும்புகிறது. இந்த வேளையில், இனயம் துறைமுகத்திட்டத்தைக் கொண்டு வந்து மீனவ மக்களை அழிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. நாங்கள் செத்த பிறகுதான் துறைமுகத்தை அமைக்க முடியும்" என்று மீனவ மக்கள் சொல்கிறார்கள்.

இனயம் துறைமுகத் திட்டத்தை எதிர்த்து வரும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர். லால்மோகனிடம் பேசினோம். "இனயம் துறைமுகம் அமைந்தால், 6 கிலோ மீட்டர் கடல் பகுதி அழிந்து விடும். துறைமுகத்தைச் சுற்றி அலை தடுப்புச் சுவர் கட்டும்போது, நீரோட்டம் மாறும். மண் குவியல் ஏற்படும் .மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்த முடியாது .1950-ம் ஆண்டு 1 லட்சம் டன் மீன் பிடிக்கப்பட்டது. இப்போது 44 ஆயிரம் டன்னாக  குறைந்துள்ளது. துறைமுகம் அமைந்தால் மீன் பிடி தொழில் அழிந்து விடும். ஏற்கெனவே குமரிமாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது.

துறைமுகத்துற்கு வரும் கப்பல்களுக்கு சுத்தமான தண்ணீர் தேவைப்படும். அதற்காக இங்குள்ள அணைகளின் நீரையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொண்டு போவார்கள். இதனால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும். இனயத்தில் அமைய இருப்பது வர்த்தக துறைமுகம் அல்ல. அது பெட்டக துறைமுகம். இதனால் வேலைவாய்ப்பு கிடைக்காது. துறைமுகத்திட்டத்துக்கு, முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மத்திய அரசு சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்தும், தூத்துக்குடி துறைமுக பணத்தைதான் இனயம் துறைமுகத் திட்டத்துக்குக் கொடுக்கிறார்கள். ஏற்கெனவே இந்த இரண்டு துறைமுகங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன. துறைமுக திட்ட வரைவு இன்னும் வெளியிடப்படவில்லை. எந்த வகையிலும் மக்களுக்கு இனயம் துறைமுகத் திட்டம் பயன்படாது" என்றார்.

ஏற்கெனவே குமரி வானம் பார்த்த பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close