Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலத்தில் சீஸன் டல்! - கும்பாவுருட்டி அருவியும் மூடல்!

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் சீஸன் களை இழந்து காணப்படுகிறது. அருகில் கேரளாவில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

 

தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தன்ணீர் கொட்டும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அரிய வகை மூலிகைகளைக் கடந்து வரும் இந்தத் தண்ணீரில் குளிக்கவும் இதமான சாரலை அனுபவித்து மகிழவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சீஸனில் குவிவார்கள். இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சீஸன் தொடங்கியது. அருவிகளில் ஆர்ப்பரித்த தண்ணீரில் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மலைப் பகுதியில் மழை இல்லை. இதனால் குற்றாலத்திலும் சாரல் பெய்யவில்லை. அருவிகளிலும் நீர் வரத்து குறையத் தொடங்கியது. குடும்பத்துடன் குளித்து மகிழ்வதற்கு உகந்த பழைய குற்றாலத்தில் தண்ணீர் இல்லை. குழந்தைகள் துள்ளிக் குதித்து மகிழும் புலி அருவியிலும் தண்ணீர் இல்லாமல் பாறையாகக் காட்சியளிக்கிறது. ஐந்தருவி மற்றும் பிரதான அருவியில் மட்டும் ஓரளவுக்குத் தண்ணீர் விழுகிறது. பாறையை ஒட்டியபடி விழும் தண்ணீரில் குளிக்க பெரும் கூட்டம் இருப்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்க வேண்டிய நிலைமை உள்ளது.

தொடங்கிய வேகத்திலேயே சீஸன் மந்தம் அடைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன், சீஸனை நம்பி கடைகளை ஏலம் எடுத்தவர்களும் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. இதனால், தற்காலிகக் கடைகளை அமைத்துள்ளவர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். இதனிடையே, குற்றாலத்தின் அருகில் கேரளாவுக்குச் சொந்தமான கும்பாவுருட்டி அருவியும் மூடப்பட்டுவிட்டது.

குற்றாலத்துக்கு வரக்கூடிய பயணிகள் கும்பாவுருட்டி அருவிக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அச்சன்கோவில் அருகில் உள்ள இந்த அருவியில் தற்போது தண்ணீர் இல்லை. கேரளாவில் பருவமழை பெய்யாததால் இந்த அருவியில் தண்ணீர் நின்றுவிட்டது. இதனால் இந்த அருவியைப் பராமரிக்கும் கேரள வனத்துறையினர் அருவியை மூடிவிட்டனர். அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள கேட்டைப் பூட்டிய வனத்துறையினர், அதில் இது தொடர்பான அறிவிப்பையும் வைத்துள்ளனர். இதனால் குற்றாலத்தில் தண்ணீர் இல்லாததால் கும்பாவுருட்டி அருவிக்குச் செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வரக்கூடிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close