Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கும்பகோணத்தில் கரைபுரண்டோடும் பாக்கெட் சாராயம்! காசு குவிக்கும் காக்கி ராஜாக்கள்!!


காவிரித் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய கும்பகோணத்தில், கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஓடுகிறது என்பதுதான் தற்போது கும்பகோணம் நகரவாசிகளுடைய பரவலான பேச்சு.

உச்ச நீதிமன்ற அறிவிப்பால் கோயில் நகரமான கும்பகோணம் டாஸ்மாக் இல்லாத நகரமாக மாறியது. 'அப்பாடா...' என நிம்மதிப் பெருமூச்சுவிட்ட கும்பகோணம் இல்லத்தரசிகள், நகரின் பல்வேறு இடங்களிலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதால் நிம்மதி இழந்து நிற்கிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதையடுத்து, கும்பகோணத்தின் மையப்பகுதியில் தஞ்சாவூர் - விக்கிரவண்டி தேசிய நெடுஞ்சாலை செல்வதால், நகரப்பகுதிக்குள் இருந்த 23 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மகாமக விழாவின்போதுகூட மூடப்படாத டாஸ்மாக் கடைகள், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் கும்பகோணத்தில் இருந்து ஆறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பாபநாசம், திருப்பனந்தாள் பகுதிகளுக்குச் சென்றுதான் மது அருந்த வேண்டிய நிலை உருவானது. நீண்ட வரிசையில் நின்றுதான் மது பாட்டில்கள் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் கும்பகோணம் குடிமகன்கள். மேலும் தினந்தோறும் அதிகத் தொலைவு சென்று மதுவாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில்தான், கும்பகோணத்தில் உள்ள அம்மன்கோயில் தெரு, வலையப்பேட்டை, பைபாஸ் சாலை பகுதிகளில் பாக்கெட்டுகளில் அடைத்துக் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. பாக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அன்றாடம் கூலி வேலைசெய்யும் தொழிலாளர்கள், மலிவு விலையில் சாராயம் கிடைப்பதால் வேறுவழியின்றி பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்து வருகிறார்கள். இந்தக் கள்ளச்சாராய பாக்கெட் விற்பனை காவல்துறையினருக்குத் தெரிந்தே நடைபெறுகிறது.
 

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராய விற்பனை குறித்து நம்மிடம் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் நகரத் தலைவர் கண்ணன், "வெளியூர்களில் இருந்து டூ-வீலர் மற்றும் கார்களில் கடத்திவந்து, நகரின் மையப்பகுதியில் சாராயத்தை விற்பனை செய்கிறார்கள். இப்பகுதியில் எந்தநேரத்திலும் கள்ளச்சாராயத்தினால் எதுவேண்டுமானாலும் நடக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. பாக்கெட் சாராயத்தைப் பொறுத்தவரை, எப்போது வேண்டுமாலும் விஷச்சாராயமாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எத்தனால் என்ற பவுடர் மூலம் தயாரிக்கப்படும் இந்த சாராயம் விலைமலிவாகக் கிடைப்பதால், கூலிவேலை பார்ப்பவர்களே இதனை அதிகம் வாங்கிக் குடிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்தச் சாராயத்தை விற்பனை செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அது விஷச்சாராயமாக மாறிவிடும். இதுதெரிந்தும் காவல்துறையினர் சாராயம் விற்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்" என்றார்.

இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலா நம்மிடம் பேசுகையில், "கும்பகோணத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு சில அதிகாரிகளே, இடம் கேட்டு வருகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவு என்பது 500 மீட்டருக்குள் இருக்கக்கூடாது என்பதாகும். இதனால் 600 மீட்டருக்குமேல் கடையைத் திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்ட நிலையில், மன்னார்குடி வகையறாக்களின் உறவினர் ஒருவரின் பார் மட்டும் மூடப்படமால் இரவு, பகலாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். கள்ளச்சாரயம், கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுப்பதற்காகவே டாஸ்மாக் கடைகளை அரசே எடுத்து நடத்தியது. ஆனால், டாஸ்மாக் கடைகள் ஒழிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காரைக்கால் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் ஸ்பிரிட்டை சுடுதண்ணீரில் கலந்து அதை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் இதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். இதனை உடனே தடுக்க வேண்டும், இல்லையென்றால் விஷச்சாராய நகரமாகக் கும்பகோணம் மாறிவிடும்" என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்ணிடம் பேசினோம். "என் வீட்டுக்காரரும், நானும் கூலி வேலைக்குச் சென்று வருகிறோம். அவர் வேலைசெய்யுற காசை முழுசுமா குடிச்சிட்டு வந்துடுவாரு. நான் வேலைக்குப் போற காச வச்சுத்தான் குடும்பத்தை நடத்திக்கிட்டு வர்றேன். எங்களுக்கு இரண்டு பொம்பளப் புள்ளைங்க இருக்குது. தவிர, அவர் தினமும் குடிச்சுட்டு வந்து என்னை அடிக்கிறார். டாஸ்மாக் கடைகளெல்லாம் மூடிட்டதா  சொன்னதும், நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரெண்டு, மூணு நாள் குடிக்காம இருந்தாரு. இப்ப மீண்டும் குடிக்க ஆரம்பிச்சுட்டாரு. பாட்டில் வாங்கிக் குடிச்சுட்டு இருந்தவரு இப்போ பாக்கெட் சாராயத்த வாங்கி குடிச்சுட்டு வர்றாரு" என்றார் கண்ணீருடன்.

பக்திமணம் வீசவேண்டிய கும்பகோணம் நகர வீதிகளில், இப்போது பாக்கெட் சாராய வாசம் வீசுவது பக்தர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதனை அரசு அவசியம் தடுத்து நிறுத்த வேண்டும்....!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close