Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 தோழர் கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா!

அந்த காலத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலங்கள் டவுன்ஹால் அருகிலிருந்துதான் புறப்படும். கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். . ஊர்வலம் துவங்குவதற்கு முன்பு ஒரு பெண்தோழர் அங்கே வருவார். ஒவ்வொரு கிராமத்துப்பெயரை சொல்லி எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று தோழர்களிடம் கேட்பார். ஏதாவது கிராமத்திலிருந்து தோழர்கள் வரவில்லையென்றால் ஏன் வரவில்லை என்று கவலையுடன் விசாரிப்பார். இதுதான் தோழர் கே.பி.ஜானகியம்மாள்.

 தோழர் கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா....        

 

மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் ஏழை, எளிய மக்களுக்கு சிறு பிரச்னை என்றாலும் உடனே கிளம்பிவிடுவார். ஒரு கைப்பை, அதற்குள் சிறிய குடை, அதுதான் அவர் சொத்து. 1917ல் மதுரையில் பிறந்த ஜானகியம்மாள்  எட்டாம் வகுப்போடு பள்ளியை விட்டு வெளியேறி  நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்புக்கலைஞரானார். அதே குழுவில் இசையமைப்பாளராக இருந்த  குருசாமியை மணந்தார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தவர், பின்னர் அதே ஆண்டில் சோசலிஸ்ட் கட்சியிலும், 1940 ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து களப்போராளி ஆனார்.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது, அதில் பல பொறுப்புகளை வகித்தார். போராட்டங்களை நடத்தி பல ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். 1967ஆம் ஆண்டில் மதுரை கிழக்குத்தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு சென்றார். பொதுவுடைமை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு வசதியான வாழ்க்கையை துறந்து தனது கணவருடன் இறுதிக்காலம் வரை தியாக வாழ்க்கை வாழ்ந்தார். சி.பி.எம்.மில் விவசாய சங்கத்தையும், மாதர் சங்கத்தையும் உருவாக்கி வளர்த்ததில் இவருடைய பங்கு அலாதியானது. இவர் உயிரோடு இருந்த காலத்திலேயே இவரின் சுயசரிதை ' ஒரு அம்மாவின் கதை ' என்ற பெயரில் வெளியானது.


இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரரான அன்னை கே.பி.ஜானகியம்மாளின் நூற்றாண்டு விழாவைத்தான் நேற்று மதுரையில் சிறப்பாக கொண்டாடினார்கள் தோழர்கள். இதில் மூத்ததோழர் நல்லகண்ணு கலந்துகொண்டார்.  ஜி.ராமகிருஷ்ணன், பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி உட்பட சி.பி.எம்மின் மூத்ததோழர்கள் கலந்துகொண்டு, ஜானகியம்மாளுடன்  பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். மதுரையின் தியாக அடையாளங்களில் இவரும் ஒருவர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close