Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழிந்து வரும் பிரம்புத் தொழில்! விவசாயிகளைத் தொடர்ந்து பிரம்பு பின்னும் தொழிலாளர்களும்!

பிரம்பு

மிழகத்தில் பிரம்பால் ஆன பொருள்கள் உற்பத்திக்குப் பெயர்பெற்ற நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தைக்கால் கிராமத்தில் தொழிலாளர்கள் அந்தத் தொழிலைவிட்டு வெளியேறும் அவலம் உருவாகி வருகிறது. சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தைக்கால் கிராமம். இப்பகுதியைக் கடந்துசெல்லும்  அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் சாலையோரக் கடைகளில் அழகிய கலைநயம்மிக்க பிரம்பால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப்பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீடுகளின் முற்றத்தில் அமர்ந்து ஆடும் ஊஞ்சல், நாற்காலிகள், உணவு அருந்தும் மேஜைகள், கூடைகள், அலமாரிகள், சாய்வு நாற்காலிகள், சோபாசெட், குழந்தைகளுக்கான நாற்காலிகள் போன்ற பிரம்பினால் செய்யப்பட்ட பல்வேறு  பொருள்கள் பல வண்ணங்களில் இங்கு தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

மாதத்திற்கு சுமார் ரூ.75 லட்சம் அளவில் பொருள்கள் விற்பனையாகின்றன. இத்தொழிலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நவநாகரிக உலகிற்கு மக்கள் மாறிவிட்டபோதிலும், பழங்காலந்தொட்டு பாரம்பர்யமாகத் தயாரிக்கப்படும் பிரம்பு பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வீடுகளை அலங்கரிக்கின்றனர். மேலும், பிரம்பினால் தயாரிக்கப்படும் ஊஞ்சல், நாற்காலிகளைப் பயன்படுத்தும்போது, அவை உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, முதுகுவலிக்கு நிவாரணியாகவும் உள்ளதாக பிரம்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். குடிசைத்தொழிலான இதற்குத்தேவையான பிரம்புகளை அஸ்ஸாம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் மலேசியா நாட்டிலிருந்து வாங்குகிறார்கள். பிரம்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அதனை லாவகமாக நெருப்பினால் சுட்டு, தேவைக்குத் தகுந்தவாறு வளைத்து பொருள்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள். 

பிரம்பு

இத்தொழிலில் பல்லாண்டுகாலம் அனுபவமுள்ள பக்கீர் முகமது பேசுகையில், "பிரம்பு பொருள்கள் தொழிலுக்கு முதலீடு அதிகம் தேவைப்படுகிறது. அனுபவமில்லாத புதியவர்கள் திடீரெனப் புக முடியாது. பணம் புரட்ட வழியில்லாமல் சிரமப்படுகிறோம். வங்கிகளிலும் எளிதாகக் கடன்பெறமுடிவதில்லை. அத்துடன், தொழிலாளர்களுக்குத் தினக்கூலியாக வழங்கப்படும் சம்பளம் போதவில்லை என்று அவர்கள் மாற்றுத்தொழில் நாடி திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகிறார்கள். நாங்கள் வட்டிக்கு வாங்கி தொழில் செய்வதால், தொழிலாளர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதுவரை அரசு, இத்தொழிலுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. விவசாயம், மீன்பிடித் தொழில், நெசவுத் தொழிலைப் போன்று பிரம்புத் தொழிலுக்கும் மானியத்துடன் கடன்வழங்க அரசு முன்வரவேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கெடுபிடிகளைத் தளர்த்தி முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். 

தமிழக பண்பாடு கலாசாரத்தைப் பறைசாற்றும் பாரம்பர்யத் தொழில் நசிந்துபோவதற்குமுன் அரசு இத்தொழிலைப் பாதுகாக்க அக்கறைகொள்ளுமா? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close