Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடக்கின்றது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியோடு முடிவடைகின்றது. இதையடுத்து எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் வேட்பாளராக மீராகுமாரும் களம் இறங்கியுள்ளனர்.

 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்திலும் எம்பி, எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கமிட்டி ஹாலில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தேர்தலையொட்டி சட்டமன்ற வளாகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பின் பக்க நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது. சட்டமன்ற வளாகத்தில் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, விக்டர் சிமோனல் வீதி அடைக்கப்பட்டது.

புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 15, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 8, அதிமுக 4, திமுக 2, ஒரு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளனர். இதுதவிர என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவில் தலா ஒரு எம்பி-க்கள் உள்ளனர். இதில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. எம்பி-க்களைப் பொறுத்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்ற நிலையில் இரண்டு எம்பி-க்களும் டெல்லியில் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவுக்கு முன்னதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலு, உதவித் தேர்தல் அதிகாரி குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி வின்சென்ட் ராயர் ஆகியோர் கமிட்டி ஹாலை ஆய்வு செய்தனர்.  

சரியாக 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முதலில் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் அன்பழகனும், இரண்டாவதாக சபாநாயகர் வைத்திலிங்கமும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அதையடுத்து அதிமுகவின் மற்ற 3 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதையடுத்து எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்த எம்எல்ஏ திருமுருகன் தனியாகச் சென்று வாக்களித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close