Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைன் மணல் விற்பனை: வரமா, சாபமா?

ஆன்லைன் மணல் விற்பனை

 ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு பிடிச்ச கதைன்னு' சொல்வாங்களே, அந்தக் கதையாத்தான் இருக்கு, மணல் விற்பனை விவகாரம். "ஆறுகளில் ஏகத்துக்கும் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளை நடக்குதுன்னு' வந்த புகாரைத்தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு. தமிழ்நாடு முழுவதும் மணல்குவாரிகளை மூட உத்தரவிட்டதோடு, "விரைவில் மணல் குவாரிகளை அரசே நடத்தும். முறைகேடுகளைத் தடுக்க ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தற்போது ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், முன்பு மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுத்து வெளியே 'செகண்ட் சேல்ஸ்' என்று இரண்டு யூனிட் மணலை ரூ.3,600 வரைதான் விற்பனை செய்தார்கள். ஆனால், இப்போது இரண்டு யூனிட் மணல் ரூ. 13,000 வரை விற்கிறார்கள். "அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா பெயரைச் சொல்லி 13,000 ரூபாய்க்கு டோக்கன் தர்றாங்க. இது முதல்வருக்குத் தெரியுமா?" என்று வெடிக்கிறார் பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன்.

"லாரி ஒன்றுக்கு இரண்டு யூனிட் மணல் ரூ.1,050-க்கு வழங்கப்படும்" என்று அறிவித்தும் 13,000 ரூபாய்வரை விலைவைத்து விற்று பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் மோசடி பண்ணுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. லாரி உரிமையாளர்போல் போய், மணல் முறைகேட்டை உறுதி செய்திருக்கும் பா.ம.க-வைச் சேர்ந்த பாஸ்கரன் நம்மிடம், "முன்னாடி தனியார் புள்ளிகள் மணல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி கரூர் மாவட்டத்தில் மட்டும் மூவாயிரம் கோடி ரூபாய்வரை சம்பாதித்ததாகப் புகார் எழுந்தது. ஆனா, அவர்கள்கூட அப்போ இரண்டு யூனிட் மணல்
ரூ.3,600 வரைதான் விற்றார்கள். தற்போது, ஆன்லைன் மணல் விற்பனையால் முன்பைவிட பத்து மடங்கு முறைகேடு நடக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் மாயனூர் மற்றும் சிந்தலவாடி குவாரிகளில் இந்த முறைகேடு நடக்குது. மணல் நிலவரத்தை நான் நேரில்போய் விசாரிச்ச போதுதான், மணல் விசயத்தில் நடக்கும் மிகப்பெரிய மோசடி தெரிய வந்துச்சு.

தாசில்தார்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இரண்டு யூனிட் மணல் பத்தாயிரம் வரை விலைவச்சு டோக்கன் மாதிரி தர்றாங்க. அதை வாங்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பத்துபேர் தங்கள் கமிஷனாக மூவாயிரம் சேர்த்து,13,000 ரூபாய்க்கு டோக்கனைக் கொடுக்கிறார்கள். அந்த டோக்கனை வாங்கும் லாரிகளை மட்டும் முன்னாடி மணல் அள்ள அனுமதிக்கிறார்கள். முன்பு முன்னாடி வந்த லாரிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் முதலில் மணல் அள்ள அனுமதிப்பார்கள். இப்போ டோக்கன் யார் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கே மணல் அள்ள அனுமதி கிடைக்கிறது. இப்படி லாரியில் மண் அள்ளுபவர்கள் வெளியில மக்கள்கிட்ட 40,000 ரூபாய்க்குவிற்கிறாங்க. இதனால பாதிக்கப்படுவது மக்கள்தான். இன்னொரு பக்கம், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி இருப்பதால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மாட்டு வண்டி வாங்கிக்கொடுத்து மணல் அள்ள வைத்து அதை லாரிகளுக்கு ஏற்றிவிட்டு, அதன்மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். இப்படி இரண்டு வகையில் மணல் கொள்ளை நடக்குது. 

மணல்

'ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்வதால் முறைகேடு இருக்காது' என்று முதல்வர் சொன்னதெல்லாம் சும்மா வெத்துவேட்டு. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பெயர்களைப் பயன்படுத்தி இந்த முறைகேடு வெளிப்படையாவே நடக்குது. உண்மையில் இதற்கு அவர்கள்தான் காரணமா, இல்லை அவர்கள் பெயரை ஆளுங்கட்சியினர் தவறாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்களா என்பதை, அவர்கள் இருவரும்தான் விளக்க வேண்டும். இந்த மணல் முறைகேட்டை முதல்வர் தலையிட்டு உடனே தடுக்காவிட்டால், அன்புமணி ராமதாஸ் தலைமையில் கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்" என்றார்.

இதற்கிடையே ஆன்லைன் மணல் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததற்கு முதல்நாள் இரவே மணல் அள்ளத்தொடங்கியதால், மாயனூர் மக்கள் மிகுந்த கோபம் அடைந்து, மாட்டுவண்டிகளைக் கொண்டு வந்து லாரிகளுக்கு முன்னால் நிறுத்தி நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். "மணலை இஷ்டத்துக்கு அள்ளிச் சுரண்டி எங்க பகுதியைப் பாலைவனமாக்க வேண்டாம். பகலில் மட்டும் நீதிமன்ற உத்தரவுபடி, மணல் அள்ள வேண்டும்" என்றுகூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்மாயனூர் - காட்டுப்புதூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

போராட்டம்

இதேபோல் லாலாப்பேட்டை அருகே உள்ள சிந்தலவாடியில் இயங்கி வரும் மணல்குவாரியை இழுத்து மூடும்படி அந்த குவாரி அமைந்துள்ள ஊராட்சியில் எச்சரிக்கை வாசகத்தை எழுதிவைத்துள்ளனர். அது சம்பந்தமாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர் நாகராஜன், "கள்ளப்பள்ளி ஊராட்சியில் இருக்கும் சிந்தலவாடியில் உள்ள காவிரி ஆற்றில் இருபது வருடமா மணல்குவாரி இயங்கி வருகிறது. நாங்க அதை மூடச் சொல்லி இரண்டு வருஷமா கடுமையான போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் பகுதியில் வெற்றிலை சாகுபடி நல்லா நடக்கும். ஆனால், கடந்த வருட வறட்சியால வெற்றிலைச் சாகுபடி செய்யமுடியாமல்போனது. போதாக்குறைக்கு மணல் குவாரியில் 10 அடி ஆழத்துக்கு மணல் அள்ளியதால், இங்குள்ள லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளின்னு பத்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குப் போயிட்டு.

இதனால், பல இடங்களில் போர்வெல் போட்டும் தண்ணீர் வரவில்லை. குடிநீர், வெள்ளாமைன்னு எதற்கும் தண்ணீர் இல்லாம பத்து கிராம மக்களும் அல்லாடிக் கிடக்கிறோம். அதனால், ஒரு மாதத்துக்கு முன்பு இந்த மணல் குவாரியை மூடச்சொல்லி கடுமையா போராடினோம். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கண்டிப்பா மூட நடவடிக்கை எடுக்கிறோம்னு சொன்னாங்க. ஆனால், மறுபடியும் இப்போ திறந்திட்டாங்க. ஏற்கெனவே மணலை பல அடி ஆழத்துக்கு அள்ளிவிட்டதால், இப்போ களிமண்தான் இருக்கு. அதைக்கூட விடாம அள்ளுறாங்க. அதனால்தான், எங்க ஊர் தகவல் பலகையில், 'நீதித்துறையே கண் திற. லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் மணல் அள்ளியது போதும். அரசியல்வாதிகளே, சம்பாதித்தது போதும். லாரிக்கு டோக்கன் வாங்கியது போதும். விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே. மீறினால்...ன்னு' எழுதி எச்சரிக்கை பண்ணி இருக்கோம். அதிகாரிகள் உடனே இந்த மணல்குவாரியை மூடலன்னா, பத்து கிராம மக்களும் சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close