Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட்... அரசாணையை ரத்துசெய்த உயர் நீதிமன்றம்... தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மருத்துவப் படிப்பு!

ருத்துவப் படிப்பை பயில்வது சிக்கல் என்ற நிலைமை மாறி, இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் நுழைவதே சிக்கல் என்ற நிலைமை உருவாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி விதிமுறைகளை வகுத்து, மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நிலையைப் பரிதாபகரமாக மாற்றிவிட்டார்கள். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை `தேசிய அளவிலான `நீட்’ தேர்வை நடத்தி, அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும்’ என மத்திய அரசு சொன்னது. இதைச் சென்ற ஆண்டு வரை தமிழக அரசு எதிர்த்து வந்தது.

நீட் தேர்வு

இந்த ஆண்டு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இதனால், தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின்படி படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஓர் அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. மீதமுள்ள 15 சதவிகித இடங்கள் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்த ஆணையைத் தற்போது உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தமிழகத்தின் மருத்துவ சேவையையே இது பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

`இந்தக் குழப்பங்களால் மாணவர்களின் நிலைமை என்னவாகும்... இதற்கு அரசு என்ன செய்யலாம்... உண்மையில் நடப்பது என்ன?’ என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கருத்துக் கேட்டோம்.

நீட்

``தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களே வெறும் இரண்டு சதவிகிதம்தான், இவர்களுக்கு 15 சதவிகித இடங்களை ஒதிக்கியதே தவறு. நீட் தேர்வு எழுதியவர்களில்கூட மத்திய அரசு பாடத்திட்ட மாணவர்கள் எண்ணிக்கை வெறும் ஆறு சதவிகிதம்தான். எனவே, மாநில அரசு அவர்களுக்கு 15 சதவிகிதம் கொடுப்பது தவறு. உயர் நீதிமன்றம் இந்த 85 சதவிகித ஒதுக்கீட்டை மறுத்திருக்கும் நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லும் என அறிவித்துள்ளது. இது தேவையற்ற தப்பிக்கும் முயற்சி. ஏற்கெனவே இடஒதுக்கீட்டைப் பல முறை நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த நீட் தேர்வு பிரச்னையிலும் அதுவேதான் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் எந்த ஒதுக்கீடும் செய்யக் கூடாது என்று வரையறுத்துள்ள உள்ள உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையிலும் அதையேதான் கடைப்பிடிக்கவேண்டியிருக்கும்.

மேலும், சமூகரீதியான ஒதுக்கீட்டைத் தவிர இதுபோன்ற மாநிலக் கல்வி, மத்திய அரசுக் கல்வி போன்ற காரணங்களுக்காக இடஒதுக்கீட்டை அனுமதிப்பது என்பது உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, நம்மால் எதிர்பார்க்க முடியாத விஷயம்தான். எனவே, உடனடியாக தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சிறப்பு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி, சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும். இப்படித்தான் ஆந்திர அரசு அனுமதி பெற்று, தங்கள் மாநில மாணவர்கள் நலனை பாதுகாத்துவருகிறது. நாம் ஏற்கெனவே கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவிகித இடஒதுக்கீட்டையும் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் வாங்கினோம்.

உயர் நீதிமன்றம் 

எனவே, இதையும் இன்றே இப்போதே பெறுவதுதான் நல்லது. மேலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கு மட்டுமே தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது. இது மட்டும் போதாது. உயர் சிறப்பு மருத்துவக் கல்விக்கும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும். இப்போது மத்திய அரசின் திட்டப்படி நீட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடந்தால், 72 சதவிகித சிபிஎஸ்இ மாணவர்களும், 28 சதவிகித தமிழக மாணவர்களும் மருத்துவக் கல்வியைப் பெறுவார்கள். இது மாநில வழி பயின்ற மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மருத்துவ முறைக்கே பெரும் ஆபத்து. எனவே, உடனடியாக இப்போது உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் அரசாணையையே சட்டமாக சட்டசபையில் நிறைவேற்றி, தமிழக அரசு குடியரசுத் தலைவரிடம் சிறப்பு அனுமதி பெற்றே ஆக வேண்டும்' என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத். மக்கள் நலனையே யோசிக்கிறோம் என்று கூறும் தமிழக அரசு இதைப்பற்றி சிந்திக்குமா... செயல்படுமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close