Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடுங்கையூர் தீ விபத்து...செல்ஃபி எடுத்து பாதிப்புக்குள்ளான பரிதாபத்துக்குரிய ஏழுபேரும்

கொடுங்கையூர் தீ விபத்து

சென்னை கொடுங்கையூரில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த 48 பேரில் செல்ஃபி பிரியர்கள் ஏழு பேர் அடங்குவர். விபத்தை 'செல்ஃபி'-யில் படம் எடுத்தபோது அவர்கள் மீது தீக்காயம் பட்டது. 

கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 'ஹாட்சிப்ஸ்' பேக்கரியில் ஜூன் 15-ம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பேக்கரி ஊழியர்கள் ஷட்டரை மூடிவிட்டுச் சென்றனர். ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே பேக்கரிக்குள் இருந்து கரும் புகைவந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு மிக அருகிலேயே கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் சேகரிப்பு நிலையம், மூன்று பெட்ரோல் பங்க்-கள் என ஆபத்தான சூழ்நிலை இருந்ததால் போலீஸார், ஊர்க்காவல் படை வீரர்கள் அப்பகுதியில் பாதுகாப்புக்கு வந்துவிட்டனர். மேலும் தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐந்து தீயணைப்பு வண்டிகளில் இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகியோர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் கருவியைத் தூக்கிப்பிடித்தபடி தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் இறங்கினர். தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த பேக்கரியின் இடதுபக்க ஷட்டர் வழியாக புகை மட்டும் வந்ததால், அந்தப் பக்கமாக முன்னேறிச் சென்று தீயை அணைக்க ஷட்டரை மேலே தூக்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் நான்குபேரும் தூக்கி வீசப்பட்டனர். தீப்பிழம்புகள் ஆங்காங்கே தெறித்து விழுந்தது. இதில், ஏகராஜ் உடல் கருகி பலத்த காயம் அடைந்தார். அவர்கள் நால்வரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். சிகிச்சைபலனின்றி ஏகராஜ் உயிரிழந்தார். ஒருபக்கம் தீயணைப்பு வீரர்கள் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்ற 20 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் பலத்த காற்றின் காரணமாக அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால், அந்தப்பகுதியில் கண் எரிச்சல் ஏற்பட்டது. பொதுமக்கள் அந்தப்பாதையில் செல்லாதபடி தொலைவிலேயே இருபுறமும் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தீவிபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தீ விபத்தை வேடிக்கைப் பார்க்கக் கூடினர். அவர்களை போலீஸாரால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை. போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, பலரும் விபத்துப்பகுதிக்கு மிக அருகில் சென்று தங்களின் செல்போனில் 'செல்ஃபி' எடுத்து வாட்ஸ்அப்-ல் அனுப்பிக் கொண்டிருந்தனர். சிலிண்டர் மற்றும் பேக்கரியில் இருந்து வெடித்துச் சிதறிய தீப்பிழம்புகள், 'செல்ஃபி' எடுத்த பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. இதில், பொதுமக்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 'செல்ஃபி' மோகத்தால் ஏழுபேர் தீயில் பரிதாபமாக சிக்கினர். 'செல்ஃபி' எடுத்த கும்பலை  கொடுங்கையூர் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் விமலேசன் அங்கிருந்து விரட்டினார். இதனால், பலர் அவரைத் திட்டியபடியே அங்கிருந்து வெளியேறினர்.

கொடுங்கையூர் தீ விபத்து

காயம் அடைந்தவர்களில் 32 பேர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர்கள் ஹெச்.எம். ஜெயராம், எம்.சி சாரங்கன், இணை கமி‌ஷனர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் போய்ப் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.

மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தாலும், இந்த தீவிபத்தில், தேவையற்ற செல்ஃபி  மோகத்தாலேயே அதிகம்பேர் காயம் அடைந்தனர். விபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கையில், விபத்துப் பகுதியில் எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமல் கொடூரமாகப் பற்றி எரியும் தீ தங்களை விட்டுவைக்கும் என்று செல்ஃபி மோகத்தில் திளைப்பவர்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இதுபோன்றவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close