Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேள்வி கேட்டால் தடை... அரசுவிதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் 'அதிர்ச்சிப்' பள்ளி!

பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர்  சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தடுத்ததால் தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர்  இருவர்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருப்பூரில் இயங்கிவருகிறது கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. குறிப்பிட்ட தேதியில் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் - ஆசிரியர் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களுக்கு சில நாள்களுக்கு முன்னர் பள்ளியிலிருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. 'இந்த கல்வியாண்டுக்கான பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்  20 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' என்றும் அதில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, நேற்று நடந்த கூட்டத்துக்கு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்ள வந்திருந்தனர். பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்களில் யு.கே.ஜி மாணவர் ஒருவரின் தந்தை பழனிக்குமார், பிளஸ்-1 பயிலும் மாணவி ஒருவரின் தந்தை செல்வம் ஆகிய இருவரும் அடக்கம். ஆனால், அவர்கள் இருவரையும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுத்து நிர்வாகம் வெளியேற்றியது. இதற்கான காரணத்தை கேட்டதற்கு பதில் அளிக்காத நிர்வாகிகள், காவல்துறை உதவியுடன் இருவரையும் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.  இதனால் கோபமடைந்த இருவரும் பள்ளியின் நுழைவு வாயில் பகுதிக்குச் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் சமாதானப்படுத்தியும் செல்ல மறுத்தவர்கள், தங்களின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

பழனிக்குமார், திருப்பூரில் நிலவும் சாயப்பட்டறை பிரச்னை, டாஸ்மாக் பிரச்னை போன்ற பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர். அவரிடம் பேசினோம், “ இலவசக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இப்பள்ளியில் படிக்கும் 147 மாணவர்களிடம் இருந்து பள்ளிநிர்வாகம் பெற்ற கல்விக் கட்டணத்தை கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து திரும்ப பெற்றுக் கொடுத்தேன். மேலும் பள்ளி வளாகத்தில் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதை தட்டிக்கேட்டதோடு மாநகராட்சிக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்தோம். இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் பள்ளிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.  

பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

இதன் எதிரொலியாக கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் என் மகனுக்கு எல்.கே.ஜி படித்து முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் புத்தகங்களைத் தரவில்லை. இப்போது யு.கே.ஜி துவங்கி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் புத்தகங்கள் தரப்படவில்லை. புத்தகங்களுக்கு மட்டுமே 8000 ரூபாய் பணம் கேட்கிறார்கள். தன் மகளின் கல்விக்கட்டணமாக செல்வம், அரசு நிர்ணயித்த தொகையை கட்டச் சென்றால் இன்று வரை அதை வாங்க மறுத்துவருகிறது பள்ளி நிர்வாகம். இப்படி பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளை தொடர்ந்து நாங்கள் கேள்வியெழுப்புவதால், பள்ளி நிர்வாகம் பழிவாங்கும்விதமாக பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் எங்களை அனுமதிக்க மறுக்கிறது.  கூட்டத்தில் கலந்துகொண்டால் மற்ற பெற்றோர்களும் எங்களுக்கு ஆதரவாக மாறிவிடுவார்கள் என்ற காரணத்துக்காகவே திட்டமிட்டு எங்களை உள்ளே விடவில்லை” என்றார். 

பெற்றோர் ஆசிரியர் கூட்டம் முடியும் வரை இருவரின் தங்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close