Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்!

மத்திய அரசு அறிவித்துள்ள ரூர்பன் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் ஹைடெக் நகரமாக மாறவுள்ளது. இதற்காக ஒரு கிராம தொகுப்புக்கு நூறு கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சியாமா பிரசாத் முகர்ஜி பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தேசியா ரூர்பன் திட்டத்தை பிரதமர் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

modi

இத்திட்டத்தில் நாடு முழுவதும் 300 ஊராட்சி தொகுப்புகளை, நகர்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலுள்ள ஊராட்சி தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இப்போது இரண்டாம் கட்டமாக மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம் சம்பந்தமாக மதுரை கலெக்டர் அலுவலக அலுவலரிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊராட்சியைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றியுள்ள ஏழு ஊராட்சிகளை இணைத்து ஒரு தொகுப்பாக்கி, இந்தக் கிராமங்களை ஹைடெக் நகரங்களாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக மத்திய அரசு ஒரு தொகுப்புக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு பல திட்டங்களை ஆய்வு செய்து தயாரித்துள்ளார்கள். இதன் மூலம் கிராமங்களுக்கு அழகான சாலை, பாதாளச் சாக்கடை, அனைவருக்கும் காஸ் இணைப்பு, தட்டுப்பாடில்லாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அழகிய குடியிருப்புகள், பசுமையான பூங்காக்கள், டிஜிட்டல் லைப்ரரி, வைஃபை வசதி, ஹைடெக் பள்ளிகள், பொழுதுபோக்கு இடங்கள் என இன்னும் பல வசதிகள் ஏற்படுத்தப்படும். அது மட்டுமல்லாது, அங்கு வசிக்கும் இளைஞர்களுக்கு உயர் கல்வி பயிற்சி, திறன் வளர்ப்புப் பயிற்சி, தொழில் பயிற்சி, நவீன வேளாண் பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்படும். தற்போது மத்திய அரசு இதற்காக 5,143 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கோயில்பாப்பாக்குடி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்டம் நிறைவேறியதும், அடுத்த கட்டம் ஆரம்பிக்கும்'' என்றார். இத்திட்டத்தால் கிராமங்கள் மறுமலர்ச்சி அடையும்!
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close