Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“தண்ணீரை நாங்கள் பரிசோதிக்கவில்லை... இப்போது கையில் எந்த டேட்டாவும் இல்லை!” - ஓ.என்.ஜி.சி நடத்திய ‘அடடே’ பிரஸ் மீட்

ஓ. என். ஜி. சி பத்திரிகையாளர் சந்திப்பு

டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இன்று  பல்லப் பட்டாசாரியா டி. ராஜேந்திரன், டி.டி. மிஸ்ரா, வி.பி. மஹாவர், குல்பீர் சிங், எஸ்.எஸ்.சி பார்த்திபன் மற்றும் ஆர்.குகன் உள்ளிட்ட ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அங்கு அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும், 

''தமிழகத்தில் எத்தனை ஓ.என்.ஜி.சி கிணறுகள் இருக்கின்றன... அதில், எத்தனை இயங்குகின்றன?''

''தமிழகத்தில் மொத்தம் 700 எரிவாயுக் கிணறுகள் இருக்கின்றன. அதில், 183 கிணறுகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.  இந்தியாவில், திரிபுராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிக அளவில் எண்ணெய் எடுக்கப்படுகிறது''.

''எத்தனை எண்ணெய்க் கழிவு சுத்திகரிப்பு (Effluent Water Treatment) நிலையங்கள் இருக்கின்றன...?''

''11 சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. அங்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை 3,000 மீட்டர் ஆழத்தில் செலுத்திவிடுவோம்''. 

''இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்காதா...?''

''ஆழத்தில்தானே செலுத்துகிறோம். அதனால், நிலத்தடிநீர் பாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை''.

தண்ணீர்

''மக்கள், 'நிலத்தடிநீர் மாசடைந்து இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்களே...?''

''அறியாமல் சொல்லி இருப்பார்கள்''. 

''எண்ணெய் எடுக்கும் நிலையங்கள் அமைந்திருக்கும் நரிமணம், கதிராமங்கலம் பகுதிகளை நாங்கள் பார்வையிட்டோம். அங்கு, தண்ணீர் மாசடைந்து இருக்கிறதே...?''

''நாங்கள் அறிவியல் முறையில் ஆய்வுசெய்திருக்கிறோம். அதன் முடிவுகள் மாசில்லை என்றுதான் சொல்கின்றன (2014-ம் ஆண்டு செய்த ஆய்வு முடிவுகளைக் காட்டுகிறார்கள். அதுவும் அவர்கள் செய்ததில்லை. அது, தமிழக அரசு செய்த ஆய்வு)''.

''நீங்கள் 2014 ஆய்வு முடிவைக் காட்டுகிறீர்கள். சமீபத்தில் எந்த ஆய்வும் செய்யவில்லையா... குறிப்பாகக் கதிராமங்கலத்தில் பிரச்னை தொடங்கிய பின்...?''

''தமிழக அரசு செய்திருக்கிறது''.

''அந்த ஆய்வு முடிவுகளைப் பகிரமுடியுமா...?''

''பகிர்கிறோம்''.

''எப்போது...?''

''பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் (ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெகுநேரம் காத்திருந்து ஆய்வு முடிவுகளைக் கேட்டோம். அவர்கள் தரவே இல்லை)''.

''சரி... நீங்கள் கதிராமங்கலம் பகுதி நிலத்தடிநீரை எந்த ஆய்வும் செய்யவில்லையா...?''

''(அவர்களுக்குள் விவாதிக்கிறார்கள்) அதான் தமிழக அரசு செய்திருக்கிறதே''.

''நீங்கள் செய்யவில்லையா...?''

''செய்யவில்லை''.

கதிராமங்கலம் விவசாய நிலம்

''நீங்கள் அளித்துள்ள செய்தி அறிக்கையில்... 'ஜூன் 30-ம் தேதி எண்ணெய்ச் சிந்திய விவசாயியின் நிலத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்...?''

''ஆம்... அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம்''.

''ஜூன் 30-ம் தேதி எண்ணெய்ச் சிந்தியிருக்கிறது.... நீங்கள் ஏறத்தாழ 15 நாள்கள் கழித்து பணிகளைத் தொடங்கியிருக்கிறீர்கள்... ஏன் இந்தக் கால இடைவெளி...?''

''மக்கள் எங்களை அனுமதிக்கவில்லை''.

''என்ன மக்கள் உங்களை அனுமதிக்கவில்லையா...?''

''ஆம். அவர்கள் எங்களை அனுமதித்திருந்தால் முன்பே பணிகளைத் தொடங்கியிருப்போம்''. 

''ஹூம்.... கமலாபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவரின் நிலத்தில் எண்ணெய்ச் சிந்தி பத்து ஆண்டுகள் ஆகின்றன... ஆனால், நீங்கள் இன்னும் அந்த நிலத்தைச் சரி செய்து தரவில்லை. அந்தப் பகுதி மக்கள், உங்களைப் பத்து ஆண்டுகளாகவா அனுமதிக்காமல் இருக்கிறார்கள்...?'' 

''என்னவென்று தெரியவில்லை... விசாரிக்கிறோம்''.

ஓ.என்.ஜி.சி

''கதிராமங்கலத்தில், ஏன் எண்ணெய்க் குழாயில் ஓட்டை விழுந்தது...?''

''இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மும்பையில் உள்ள ஒரு லேப்புக்கு ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறோம்''.

''சரி... மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் ஊராட்சியில் சிங்காரவேலு என்பவரின் நிலத்தில் எண்ணெய்ச் சிந்தியதே... அதுகுறித்த முழுமையான விசாரணையாவது முடிந்துவிட்டதா...?''

''அதிகாரிகளிடம் விசாரித்துச் சொல்கிறோம்''.

''இந்த எண்ணெய்க் கிணறுகள், எரிவாயுக் குழாய்கள்... இதனால் ஏதேனும் பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா...?''

''எங்களிடம் உள்ள உபகரணங்கள் எல்லாம் சர்வதேச தரத்தில் உள்ளவை. அவை, அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப எண்ணெய்க் குழாய்களையும் மற்ற உபகரணங்களையும் மாற்றியும் வருகிறோம். அதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு''.

''ஒருவேளை, பேரிடர் ஏற்பட்டால் யார் பொறுப்பு...?''

''நாங்கள்தான் முழுப்பொறுப்பு''.

''அப்படியானால், எண்ணெய்க் கிணறுகள்... எண்ணெய்க் குழாய்கள் உள்ள பகுதிகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு மக்களுக்கு ஏதேனும் பயிற்சிகள் (Mock Drill)  அளித்திருக்கிறீர்களா..?''

''அளித்திருக்கிறோம். மாதாமாதம் எங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம்''.

''நாங்கள் கேட்பது, மக்களுக்கு ஏதேனும் பயிற்சி அளித்திருக்கிறீர்களா என்று...?''

''அளித்திருக்கிறோம்''.

''கடைசியாக எப்போது அளித்தீர்கள்...?''

''தேதி நினைவில்லை''.

''எந்த மாதம் என்றாவது சொல்லுங்கள்?''

''நினைவில்லை''.

ஓ. என். ஜி. சி

''எண்ணெய் எடுக்கும் அல்லது எண்ணெய்க் குழாய்கள் பதித்திருக்கும் நரிமணம், கமலாபுரம், அடியக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளைச் சந்தித்தபோது... ஓ.என்.ஜி.சி நிலத்தை குத்தகைக்கு எடுத்தபோது, ‘எங்களுக்கு நிலத்தைக் குத்தகைக்குத் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு வேலை தருகிறோம்’ என்று வாக்களித்ததாக மக்கள் கூறினார்கள். நீங்கள் எத்தனை பேருக்கு வேலை அளித்திருக்கிறீர்கள்?''

''இது, பொதுத்துறை நிறுவனம். நிலம் குத்தகைக்கு அளித்திருக்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் இங்கு யாருக்கும் வேலைவாய்ப்பு தந்துவிட முடியாது. குஜராத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில், 'நிலம் அளித்திருக்கிறார்கள் என்பதற்காக ஒருவருக்கு பணி வாய்ப்பு வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. அதனால், நிலம் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்ற சலுகைக்காக நாங்கள் யாருக்கும் பணி வாய்ப்பு வழங்கவில்லை''. 

''நீங்கள், மக்களுக்கு வாக்களித்திருந்ததாகச் சொல்கிறார்களே...?'' 

''அப்படி நாங்கள் எந்த வாக்கும் மக்களுக்கு அளிக்கவில்லை''.

''முப்பது ஆண்டுகளாக எண்ணெய் எடுக்கிறீர்கள். இதுவரை எத்தனை முறை எண்ணெய்க் குழாயில் ஓட்டை விழுந்து நிலத்தில் எண்ணெய்ச் சிந்தி இருக்கிறது, எத்தனை விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன என்ற தரவுகள் இருக்கிறதா...?''

''இப்போது கையில் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் தருகிறோம். (முடிந்தும் தரவில்லை... மின்னஞ்சல் அனுப்புவதாகக் கூறி இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பினால், அதை நம் தளத்தில் பகிரத் தயாராக இருக்கிறோம்)''.

''இந்த முப்பது ஆண்டுகளில் எவ்வளவு எண்ணெய், விபத்தினால் நிலத்தில் சிந்தியிருக்கும்...?''

''ஏறத்தாழ 2,000 லிட்டர் எண்ணெய்''.

ஓ. என். ஜி. சி

''அவ்வளவுதானா...?''

''ஆம்''.

'' '183 எண்ணெய்க் கிணறுகளும், 11 சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்பாட்டில் உள்ளன' என்று சொல்கிறீர்கள்... 183 எண்ணெய்க் கிணறுகளின் கழிவுகளைச் சுத்திகரிக்க 11 நிலையங்கள் போதுமானவையா...?''

''போதுமானவைதான்''.

''நிலத்தில் எண்ணெய்ச் சிந்தியதால் எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... எண்ணெய்க் கழிவுகள் நிலத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன... எண்ணெய் எடுக்கும் பணி முடிந்தபின் அந்த நிலத்தின் நிலை... என டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-யின் தாக்கம் குறித்து ஒரு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா...?''

''வெளியிடுகிறோம். ஆனால், நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓ.என்.ஜி.சி ஒரு பொதுத்துறை நிறுவனம்... அது, மக்களுக்கானது; தேசத்தின் வளர்ச்சிக்கானது. குறிப்பாக, அது அரசாங்கத்துடையது. அரசு நிறுவனம்... மக்களுக்கு எதிராகச் செயல்படுமா...?''

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close