Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் பிரமாண்டமான  ‘ப்ளாஸ்டிக்’ வாய்க்கால்.!

'தமிழகம் முழுக்க உள்ள ஏரி, குளங்கள் தூர் வாரப்படும்' என்ற அறிவிப்பைக் கொடுத்து, நீர்நிலைகளின் காவலனைப்போல காட்டிக்கொள்ளும் தமிழக அரசின் கவனத்துக்கு...

இது,நொய்யல் ஆற்றின் கிளைவாய்க்கால். சேத்துமாவாய்க்கால் என்பது அதன் பெயர். நொய்யலிலிருந்து பிரியும் சேத்துமாவாய்க்கால், செல்வபுரம் வழியாகச் சென்று உக்கடம் பெரியகுளத்தில் கலக்கிறது. பெரியகுளம், வெளிநாட்டுப் பறவைகள் எல்லாம் வந்துசெல்லும் கோவையின் பெரிய நீர்நிலை. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை தண்ணீர் மட்டுமே ஓடிய சேத்துமா வாய்க்காலில், இப்போது ப்ளாஸ்டிக் பெருக்கெடுத்து மிதக்கிறது. தண்ணீர் பாயமுடியாமல் தேங்கித் திணறுகிறது.  

செல்வபுரம் பகுதியில் சேத்துமாவாய்க்காலைப் பார்ப்பவர்கள், கோடி ரூபாய் கொடுத்தாலும் அது தண்ணீர் ஓடும் வாய்க்கால் என்பதை நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க ப்ளாஸ்டிக்கின் பிடியில் சிக்கியிருக்கிறது சேத்துமாவாய்க்கால். இதுகுறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம், “ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடிகூட இந்த வாய்க்கால்ல கண்ணாடிபோல தண்ணி ஓடிச்சு. இப்போதான் இவ்ளோ குப்பைங்க. எல்லாம் மக்கள் போடுற குப்பைதான். தப்பு எங்க மேலதான். ஆனா, இங்கு குப்பை போடுறதுக்கே இடம் இல்லை. கார்ப்பரேஷனும்  இங்க உள்ள குப்பைகளை முறையா அள்ளுறது இல்லை. அள்ளுற குப்பைங்களை குப்பைக் கிடங்குக்கு எடுத்துட்டுப் போறதில்லை. இங்கேயே போட்டுட்டு போயிடுறாங்க. இந்தப் பகுதியின் மொத்தக் குப்பைக் கழிவுகளும் அந்த வாய்க்காலுக்குத்தான் போகுது. இப்போது, அந்த வாய்க்காலைப் பார்க்க எங்களுக்கே  அவமானமா இருக்கு. ஆனா, என்ன செய்றதுன்னு தெரியலை. இந்தத் தண்ணி, பெரிய குளத்துலதான் போய்ச் சேருது. இங்கிருந்து போற தண்ணி  விஷத்துக்குச் சமம். இந்தத் தண்ணில வாழும்  நீர்வாழ் உயிரினங்கள் நிச்சயமா பெரிய அளவுல  பாதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், மக்களுக்கும் சுகாதாரக்கேடு. ஏரி,குளங்களைத் தூர் வாரும்  அரசாங்கம், கிளைவாய்க்கால்களையும் கவனிக்க மறந்துடுச்சு. குப்பைகளைப் போடுறதுக்கு எங்களுக்கு வசதி செஞ்சுகொடுத்தால்தான் அந்த வாய்க்காலை மீட்க முடியும்’ என்று தங்கள் தவறை உணர்ந்து அரசாங்கத்துக்குக் கோரிக்கை வைக்கிறார்கள்.     

ஏரிகளுக்கும் குளங்களுக்கும் நரம்புகள் போன்றது வரத்துக் கால்வாய்கள். அதைக் கழிவுகளுக்குக் காவுகொடுத்ந்த் தண்ணீரைக் கெடுத்துவிட்டு, குளங்களைத் தூர் வாருவதில் பயனில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close