Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவ வீரர்களின் தியாகத்தை இளைஞர்களிடம் விதைக்கும் போட்டி!

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு, ராணுவ வீரர்கள் பற்றிய பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. மயிலாப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் மாணவ, மாணவியர் பலர் கலந்துகொண்டு போட்டிப் போட்டுப் பேசினார்கள். இந்தப் போட்டியை ஒருங்கிணைத்தார் வழக்கறிஞர் சுமதி.

போட்டி

வழக்கறிஞர் சுமதி நம்மிடம், ''மேஜர் ஜெனரல் யான் கார்டோசோ (ian cardozo) எழுதிய ஆங்கிலப் புத்தகம், 'பரம் வீர்'. இந்தப் புத்தகத்தில் 'பரம் வீர் சக்ரா' விருதுபெற்ற வீரர்களின் வாழ்க்கை; அவர்கள் செய்த வீரச் செயல்கள்; அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என அனைத்தையும் குறிப்புகளுடன் எழுதியிருப்பார். அடுத்து, விகடன் பிரசுரத்தில் வெளிவந்த 'மறத்தல் தகுமோ?' என்ற புத்தகத்திலும், தன்னலமற்ற அந்தத் தியாகிகளை நினைவில் வைத்துப் போற்றும்விதமாக டாக்டர் பா. ஸ்ரீகாந்த் தனது எழுச்சிமிக்க எழுத்தால், ராணுவ வீரர்களின் தியாகத்தை நம் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் கொண்டுவந்து நிறுத்துவார். இந்த இரண்டு புத்தகங்களும்தாம் இந்தப் போட்டி நடத்த எனக்குத் தூண்டுகோல். 

ராணுவ வீரர்களின் தியாகம் பற்றிய செய்திகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டோம். இந்தப் புத்தகங்களைக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைப் படிக்கவைக்க வேண்டும் என நினைத்தோம். அதை ஒரு பேச்சுப் போட்டியாகவே நடத்தலாம் என முடிவெடுத்தோம். ஒரு தலைப்பு கொடுத்து மாணவர்களைப் பேசச் சொல்வதைவிட, இந்தப் புத்தகத்தை முழுவதும் படி, அதில் உனக்குப் பிடித்த ராணுவ வீரரைப் பற்றிப் பேசு' என்று சொன்னால், புத்தகம் முழுவதையும் படிப்பார்கள். தங்களுக்கு விருப்பமான வீரரைப் பற்றிப் பேசுவார்கள்.

திரும்பத் திரும்ப ராணுவ வீரர்களைப் பற்றி படிப்பதன் மூலம், பேசுவதன் மூலம் அவர்கள் போற்றப்படுகிறார்கள். மாணவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டியைச் சென்னை கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தத் திட்டமிட்டோம். 'யுவ சக்தி' என்ற அமைப்புடன் இணைந்து போட்டியை நடத்த ஏற்பாடுகளைச் செய்தோம். இந்த அமைப்புக்கு சாதி, மதம் என்ற எந்த அடையாளமும் இல்லாமல், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ராணுவ வீரர்கள் பற்றி பேச்சுப் போட்டி நடத்துவதாக அறிவித்தோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் பேசலாம் எனச் சொன்னோம்.

150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அரையிறுதிப் போட்டியில் 32 மாணவர்களைத் தேர்வு செய்தோம். அதிலிருந்து 10 மாணவர்களை இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இறுதிப் போட்டியில், நான்கு மாணவர்களுக்குப் பரிசு வழங்கவிருக்கிறோம். ராணுவ வீரர்கள் பற்றிப் பேசுவதால் முதலிடம், இரண்டாமிடம் என்ற பாகுபாடு இல்லாமல், மூன்று சிறந்த பேச்சாளர்களுக்குத் தலா 10,000 ரூபாயும், மற்றவருக்கு சிறப்புப் பரிசாக 5,000 ரூபாயையும் தர திட்டமிட்டுள்ளோம்.  

இறுதிப் போட்டி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. பல நூறு மாணவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். இளைஞர்களிடம் தேசிய உணர்வையும், ராணுவ வீரர்களின் தியாகத்தையும் இந்தப் போட்டி நிச்சயம் விதைக்கும் என்பது உறுதி'' என்கிறார் சுமதி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close